சென்னை: மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் பிரின்ஸ் வாரி மேல்நிலைப் பள்ளி சார்பில் அறிவியல், கலை மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி நிறைவு மற்றும் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா நடைபெற்றன.
விழாவில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கி சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவர்கள் மற்றும் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் சார்பில் கல்வி ஊக்கத் தொகை வழங்கி வாழ்த்தினார்.
மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் ஆர்.இராமன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். பிரின்ஸ் கல்விக் குழும தலைவர் கே.வாசுதேவன் வரவேற்றார். துணைத் தலைவர்கள் வா.விஷ்ணு கார்த்திக், பிரசன்னா வெங்கடேசன், பள்ளி முதல்வர் கே.பி.லத்தா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் அன்பில் மகேஸ் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசும்போது, "கல்வி வாழ்க்கைக்கு தேவையான அறத்தை கற்றுக் கொடுக்கிறது. பள்ளிகள் மாணவர்களுக்கு மதிப்பெண்களைப் பெற வழிகாட்டுவதை விட சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக திகழ தேவையானவற்றை கற்றுத் தர வேண்டும்.
மாணவர்களுக்கு அறிவுரை
மக்கள் பயன்பெறும் வகையில் மாணவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கி அதற்கு முறையாக காப்புரிமை பெற வேண்டும். அரசின் நல்ல திட்டங்களால் அரசுப் பள்ளிகளை பெருமையுடன் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.
தமிழக அரசு மாணவர்களின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகிறது. மாணவர்கள் அரசின் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும்" என்று கூறினார்.
இவ்விழாவில் மாநிலக் கல்லூரி பேராசிரியர் எஸ்.ரகு, சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஜே.கே.மணிகண்டன், பிரின்ஸ் பள்ளிகளின் கல்வி ஆலோசகர்கள் கே.பார்த்தசாரதி, எம்.தருமன், என்.சிவப்பிரகாசம், பி.ஆர்.ரவிராம், பேராசிரியர்கள் ஷர்மிளா, நிவேதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.