தமிழகம்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: வாசன் கண்டனம்

செய்திப்பிரிவு

ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். மேலும், மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு இலங்கை பிரதமரிடம் உத்தரவாதம் பெற வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடரபாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 50 படகுகளில் சென்ற மீனவர்கள் நேற்று இரவு கடலில் மீன்பிடித்துக் கொண்டிந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 50 படகுகளில் இருந்த மீனவர்களை தாக்கியதோடு, மீன்களையும், வலைகளையும் கடலில் வீசி எறிந்தனர். இதனால் ஒரு நவீனப் படகில் இருந்த 5 மீனவர்கள் கடலில் வீழ்ந்ததோடு, அப்படகும் கடலில் மூழ்கியது. கடலில் மூழ்கிய மீனவர்களை அருகில் இருந்த மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர். இலங்கை கடற்படையினரின் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

இலங்கை பிரதமர், இந்தியா வந்திருக்கும் இந்த சமயத்தில் தமிழக மீனவர்கள் மீதும், படகுகள் மீதும் இலங்கை கடற்படையினரின் தாக்குதல் கண்டனத்துக்குரியது. இது தொடர்பாக மத்திய அரசு இலங்கைப் பிரதமரிடம் - இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் பற்றி விளக்க வேண்டும். இதுபோன்ற இலங்கை கடற்படையின் தாக்குதல்கள், சிறைப்பிடிப்புகள் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்கு இந்தியா இலங்கைப் பிரதமரிடம் உத்தரவாதம் பெற வேண்டும். இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் 104 படகுகளையும் மீட்டுத்தரவும், கச்சத்தீவுப் பகுதியில் மீனவர்களின் மீன்பிடி உரிமையை ஏற்படுத்தி தர இலங்கைப் பிரதமரிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT