தமிழர்கள் மீதுள்ள வெறுப்பின் காரணத்தால் தென் தமிழகம் மற்றும் சென்னையில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை அமல்படுத்த வேண்டுமென பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் உள்ளதால், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். மேலும், தென் தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் துயில் பிரிவு உள்ளதாகவும் அதற்கு திக உள்ளிட்ட அமைப்புகள் உடந்தை என்றும் அவர் அபாண்டமாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திக, பெரியாரிய அமைப்புகள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மீது சுப்ரமணியன் சுவாமிக்கு வேரூன்றியுள்ள வஞ்சகத்தை அவரது அறிக்கை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. காஷ்மீர் மற்றும் சில வட கிழக்கு மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ள ஆயுத படைகள் சிறப்பு பாதுகாப்புச் சட்டத்தை (AFSPA) தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற சுப்ரமணியன் சுவாமியின் வேண்டுகோள், தமிழக மக்கள் மீது அவருக்கு இருக்கும் வெறுப்புணர்வின் வெளிப்பாடாக இருக்கின்றது.
தமிழகத்தில் நேரடி தேர்தல் களத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றிப் பெற முடியாத பாஜக, கொல்லைப்புற வழியாக தமிழகத்தில் அதிகாரத்தைப் பெறுவதற்கு துடியாய் துடிக்கின்றது. பாஜகவின் இந்த ஜனநாயகப் படுகொலைத் திட்டத்தை தமிழக மக்கள் ஒன்று திரண்டு நின்று முறியடிக்க வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.