ஜவ்வாதுமலையில் ரூ.35 லட்சம் மதிப்பில் தரமற்ற சாலையை அமைத்துள்ளதாக மலைவாழ் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தி.மலை மாவட்டம் ஜவ்வாது மலை, ஜமுனாமரத்தூர் ஒன்றியம் ஊர் கவுண்டனூர் ஊராட்சிக்கு உட்பட்ட குட்டூர் கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சாலை வசதி இல்லாததால் பள்ளி மற்றும் மருத் துவமனை உட்பட அத்தியாவசிய தேவைகளுக்கு எளிதாக செல்ல முடியாமல், மலைவாழ் மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக அவதிப் பட்டு வருகின்றனர்.
இதனால் அவர்கள், குட்டூர் கிராமத்தில் இருந்து கூட்டுச்சாலை வரை உள்ள சுமார் 2 கி.மீ., தொலைவுக்கு சாலை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.35 லட்சம் மதிப்பில், சமீபத்தில்தார்ச்சாலை அமைக்கப்பட்டுள் ளது. இந்த சாலை தரம் இல்லாமல் பெயர்ந்துவிடுவதாக மலைவாழ் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “ரூ.35 லட்சத்தில் அமைக் கப்பட்டுள்ள தார்ச்சாலையானது தரமற்றுள்ளது. அவசர கதியில் போடப்பட்டதால், தார்ச்சாலை பெயர்ந்துவிடுகிறது. தார்ச்சாலை அமைக்கும்போது அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை. இது குறித்து அவர்களிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. பருவ மழைக்கு தாக்கு பிடிக்காது. பழைய நிலைக்கு மீண்டும் சென்றுவிடும்.
எனவே, தரமற்ற சாலையை அமைத்தவர்கள் மற்றும் அவர்களுக்கு துணை போனவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தரமான சாலையை அமைக்க வேண்டும்” என்றனர்.