தமிழகம்

மாமல்லபுரம் பட்டம் விடும் விழா நிறைவு: 30 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்

செய்திப்பிரிவு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நடந்த சர்வதேச பட்டம் விடும் விழா நேற்றுடன் நிறைவுபெற்றது. கடந்த 3 நாட்களில் 30 ஆயிரம் பேர் கண்டு ரசித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலாத் துறை மற்றும் க்ளோபல் மீடியா பாக்ஸ் என்ற நிறுவனம் இணைந்து பட்டம் விடும் விழாவை நடத்தின. இதில் இந்தியா தவிர அமெரிக்கா, தாய்லாந்தில் இருந்து பங்கேற்ற கலைஞர்கள் பல்வேறு வண்ண வடிவங்களிலான பட்டங்களை பறக்கவிட்டனர்.

கடந்த13-ம் தேதி தொடங்கிய இந்த விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 80-க்கும் மேற்பட்ட பட்டம் விடும் கலைஞர்கள் பங்கேற்று பட்டங்களை பறக்கவிட்டனர். நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று ஏராளமான வண்ணங்களில் பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன.

நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர விழா மற்றும் விடுமுறை நாளான நேற்று பட்டங்களையும் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசிப்பதற்காக சென்னை, மற்றும் அதன் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இதனால், அப்பகுதி விழாக்கோலமாக காணப்பட்டது.

மேலும், 3 நாட்களாக நடைபெற்ற பட்டம் விடும் விழாவை சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்ததாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT