தமிழகம்

அமைச்சர் கார் மீது தாக்குதல் சம்பவத்தில் மதுரை மாவட்ட பாஜக துணை தலைவர் கைது: திமுகவினர் அமைதி காக்க துரைமுருகன் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

மதுரை/ராமேசுவரம்: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 7-வது நபராக மதுரை மாவட்ட பாஜக துணை தலைவர் ஜெயவேல் கைது செய்யப்பட்டார்.

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த மதுரை மாவட்டம், து.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நேற்று முன்தினம் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பிய நிதி அமைச்சர் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர்.

இதுதொடர்பாக மதுரை அவனியாபுரம் காவல் துறையினர் மதுரை மாநகர் மாவட்ட பாஜக துணைத் தலைவர் குமார் என்ற மார்க்கெட் குமார்(48), மாவட்ட பிரச்சாரப் பிரிவு செயலாளர் பாலா (எ) பாலசுப்பிரமணியன்(49), திருச்சியைச் சேர்ந்த பாஜகவினர் கோபிநாத்(42), ஜெயகருணா(39), கோபிநாத்(44), முகமது யாகூப் (42) ஆகிய ஆறு பேர் மீது 4 பிரிவுகளில் நேற்றுமுன்தினம் மாலை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து மேலும் 24 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் மதுரை மாவட்ட பாஜக துணைத் தலைவர் ஜெயவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். பிறகு உடல்நிலை காரணமாக ஜெயவேல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

துரைமுருகன் கண்டனம்

இச்சம்பவம் குறித்து திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுஉள்ள அறிக்கை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தேசிய கொடி ஏற்றப்பட்டிருந்த கார் மீது காலணியை வீசியுள்ள பாஜகவினரின் அரசியல் பண்பாடற்ற செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரரின் செயலுக்கு மரியாதை செய்வதிலும், இதுபோன்ற அரசியல் ஆதாயம் தேடும் செயலில் ஈடுபட்டு அராஜகத்தை பாஜகவினர் கையில் எடுத்திருப்பது கேவலமான அரசியலாகும். இது ஒருவழிப்பாதையல்ல என்பதை பாஜகவினர் உணர வேண்டும் என எச்சரிக்கிறேன். இச்சம்பவத்தில் காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதால், திமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அண்ணாமலை கருத்து

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராமேசுவரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீச்சு சம்பவம் விரும்பத்தகாத ஒன்று. அதை ஒருபோதும் பாஜக நியாயப்படுத்தாது. ஆக்ரோஷமாக ஓரிருவர் செய்த தவறான செயல் ஒட்டுமொத்த பாஜகவின் செயல்பாடாகவும் பார்க்கக் கூடாது.

மதுரை மாவட்டத் தலைவர் சரவணன் கட்சியை விட்டுச் சென்றது அவரது தனிப்பட்ட விருப்பம். அவர் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று சொன்ன கருத்துக்காக அவரை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதுகுறித்து, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, பாஜகவினர் காலணி வீசியது காட்டுமிராண்டிதனமான செயல். அந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று அண்ணாமலை பதவி விலக வேண்டும் என்றார்.

அமைச்சர் கீதாஜீவன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, தேசியக்கொடி பொருத்தப்பட்டிருக்கும் வாகனத்தின் மீது காலணி தூக்கி வீசியதில் இருந்தே பாஜகவினருக்கு எவ்வளவு தேசபக்தி இருக்கிறது என்று தெரிகிறது என்றார்.

SCROLL FOR NEXT