காவிரி விவகாரத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பது கண்டிக்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக பிரதமரை சந்தித்துப் பேச - மனு ஒன்றினை அளிக்க நாடாளுமன்ற மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை தலைமையில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட முயற்சி வரவேற்கத்தக்கது.
அதேநேரத்தில், இவர்களை சந்திக்க பிரதமர் அலுவலகம் அனுமதி தராதது கண்டிக்கத்தக்கதாகும். இது ஜனநாயக நடைமுறைக்கு உகந்த ஒன்றல்ல.
காவிரி நீர்ப் பிரச்சினையில் தொடக்கம் முதலே பிரதமரும் - மத்திய அமைச்சர் பலரும் ஒரு சார்பு நிலை எடுத்து வருவது - தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், துணை சபாநாயகர் தலைமையில் பிரதமரை சந்திக்க அதிமுக எம்.பி.க்கள் விரும்பியபோது, அதற்கு அனுமதி அளிக்காதது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போன்றதாகும் - இது வன்மையான கண்டனத்திற்கும் உரியதாகும்'' என்று வீரமணி கூறியுள்ளார்.