மத்திய வல்லுனர் குழுவின் ஆய்வே தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பதை தடுக்க மத்திய அரசு செய்த சதிதான் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் உள்ள காவிரி பாசனப் பகுதிகள் மற்றும் அணைகளை ஆய்வு செய்த மத்திய வல்லுனர் குழு அதன் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. இருமாநிலங்களிலுமே நிலைமை மோசமாக இருப்பதாக ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள வல்லுனர் குழு, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும்படி எந்த பரிந்துரையும் அளிக்கவில்லை. மத்திய வல்லுனர் குழுவின் இந்த பயனற்ற அறிக்கை ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த அறிக்கை முழுக்க முழுக்க தமிழகத்துக்கு எதிராகத் தயாரிக்கப்பட்டுள்ளது. காவிரி சிக்கலில் தமிழகத்துக்கு தொடர் துரோகம் செய்து வரும் மத்திய அரசு, இக்குழு மூலம் அடுத்த துரோகத்தை இழைத்துள்ளது.
கர்நாடகத்தில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும், அங்குதான் அதிக பரப்பளவில் பயிர்கள் கருகியிருப்பதாகவும் வல்லுனர் குழு அறிக்கையில் கூறியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.
கர்நாடகத்தில் 2014, 2015 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட உழவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 583. இவர்களில் 14 சதவீதம் பேர் அதாவது 210 பேர் மட்டுமே காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால், தமிழகத்தில் இதே காலத்தில் ஆயிரத்து 195 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அதாவது 600-க்கும் அதிகமான உழவர்கள் காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இதை மத்திய குழு கருத்தில் கொள்ளவில்லை.
தண்ணீர் இல்லாததால் கர்நாடகத்துக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுவதும் உண்மையல்ல. கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் அணைகளில் இருந்த தண்ணீரைக் கொண்டு ஒருபோக சாகுபடியை ஏற்கனவே வெற்றிகரமாக முடித்துவிட்டது. அதற்கு முன்பாகவே நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக கோடை சாகுபடியையும் செய்திருக்கிறது. இரண்டாம் பருவ சாகுபடியும் பெரும்பாலான பகுதிகளில் எந்த பாதிப்பும் இல்லாமல் நடைபெற்று வருகிறது.
ஆனால், தமிழக நிலைமை அப்படியல்ல. காவிரியில் தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. சம்பா பருவ நெல் நடவு முடிவதற்கு முன்பே தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் கிடைக்காதபட்சத்தில் சம்பா பயிரும் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.
மத்திய வல்லுனர் குழுவின் ஆய்வே தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பதை தடுக்க மத்திய அரசு செய்த சதிதான். எனவே, தமிழகத்தில் காணப்படும் நிலைமையை உச்ச நீதிமன்றத்திற்கு உணர்த்தி சம்பா பயிருக்கு போதிய தண்ணீரைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.