தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் நேற்று திறந்து வைத்தார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். படம்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் புதிய கட்டிடம் திறப்பு; இளம் மருத்துவர்களுக்கு மத்திய அமைச்சர் அறிவுரை

செய்திப்பிரிவு

இன்றைய இளம் மருத்துவர்கள் நமது பாரம்பரிய மருத்துவத்தை உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் துறைமுகம், கப்பல், நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் அறிவுறுத்தினார்.

சென்னை தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனை வளாகத்தில் ரூ.13 கோடி செலவில் மத்திய ஆராய்ச்சி குழுமத்தின் புதிய தலைமை அலுவலக கட்டிடம் மற்றும் ரூ.35 கோடி செலவில் அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை, புதிய புறநோயாளிகள் பிரிவு விரிவாக்க கட்டிடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இவற்றை மத்தியஅமைச்சர் சர்பானந்த சோனோவால் நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் மத்திய ஆராய்ச்சிக் குழுமத்தின் சாதனைகள் மற்றும் அகத்தியரின் குணவாகுடம் குறித்த நூலை மத்திய அமைச்சர் வெளியிட்டார். நோய் எதிர்ப்பாற்றலை ஊக்குவிக்கும் அமுக்கரா சூரணம் மாத்திரைகளையும் வழங்கினார். பின்னர் வீடுதோறும் மூவர்ணக்கொடி நிகழ்வை தொடங்கி வைத்து,புதிய கட்டிடத்தில் மூவர்ணக் கொடியையும் ஏற்றி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:

பாரம்பரிய மருத்துவத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. கரோனா காலத்திலும் தமிழகம் இதில் சிறப்பாக செயல்பட்டது. பல துறைகளிலும் தமிழகம் சிறந்த மாநிலமாக செயல்படுகிறது.

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் (சிசிஆர்எஸ்)மூலம் இதுவரை 10 காப்புரிமைகள் தாக்கல் செய்யப்பட்டு 623அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு 5 லட்சத்துக்கும் அதிகமான அமுக்கராசூரண மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்றைய இளம் மருத்துவர்கள் நமது பாரம்பரிய மருத்துவத்தை உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பழநியில் புதிய கல்லூரி

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, ‘‘2 லட்சத்துக்கும் அதிகமானோர் தினமும் தமிழகத்தில் சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தமிழகத்தில் 100 சித்த மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 359காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. பழநியில் புதிய சித்தமருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளது. நாமக்கல்லிலும் கல்லூரி திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் 200 ஏக்கரில்மூலிகை பண்ணை அமைக்கப்பட உள்ளது. சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு ஆளுநரின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்.

மூலிகைப் பயிர்கள் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபடுவதை ஊக்குவிக்க பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும். மாணவர்களுக்கு மூலிகைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையர் எஸ்.கணேஷ், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சிறப்பு செயலர் பிரமோத் குமார் பாடக், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழும தலைமை இயக்குநர் க.கனகவல்லி, மருத்துவமனை இயக்குநர் மீனாகுமாரி ஆகியோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT