தமிழகம்

பொள்ளாச்சி | கேரளாவுக்கு கருங்கல் ஏற்றிச்சென்ற லாரி மீது பாஜகவினர் தாக்குதல்

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: தமிழகத்தில் கேரள எல்லையோர மாவட்டங்களில் உள்ள குவாரிகளில் இருந்து கருங்கல், கிராவல் மண் ஆகியவற்றை டிப்பர் லாரிகள் மூலம் கேரளாவுக்கு கொண்டுச் செல்வது வழக்கம்.

அனுமதிக்கப்பட்ட அளவை விட லாரிகளில் அதிக பாரம்ஏற்றி செல்வதாக பல்வேறு அமைப்புகள், கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாஜக மாநாட்டில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்திச் செல்லப்படுவதை பாஜக தடுத்து நிறுத்தும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பொள்ளாச்சி வழியாக 2 டிப்பர் லாரிகளில் கருங்கற்கள் அதிக பாரம் ஏற்றிச் செல்வதை கண்ட பாஜக நகரத் தலைவர் பரமகுரு தலைமையிலான 20-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டனர்.

கோவை- பொள்ளாச்சி சாலையில் காந்தி சிலை அருகே லாரிகளை தடுத்து நிறுத்தி கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொள்ளாச்சி டிஎஸ்பி தீபசுஜிதா, பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். டிப்பர் லாரியை டிஎஸ்பி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். லாரியின் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்தும், லாரியில் அதிக பாரம் ஏற்றி வந்தது குறித்தும் போலீஸார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT