காவிரி மத்திய வல்லுநர் குழுவும் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்று சமக தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய நீர் ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் அமைக்கப்பட்ட காவிரி மத்திய வல்லுநர் குழுவும் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது.
கர்நாடகத்திலும், தமிழ்நாட்டிலும் ஆய்வை மேற்கொண்ட இக்குழு, பருவ மழை காரணமாக இரு மாநிலங்களிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் தமிழகத்தைவிட கர்நாடகத்தில் பாதிப்பு அதிகம் என்றும் தெரிவித்திருக்கிறது.
ஆனால் கர்நாடக அணைகளில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்தி அங்குள்ள விவசாயிகள் சாகுபடியை ஏற்கெனவே முடித்துவிட்டு, 2-ஆம் சாகுபடியும் ஒரு சில இடங்களில் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் தமிழகம் இன்னும் வறட்சியில் உள்ளது.
காவிரி மத்திய வல்லுநர் குழு தமிழ்நாட்டில் குறுகிய நேரத்தில், அவசர அவசரமாக ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வு செய்தபோது தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது. சம்பாவும் பாதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது. தற்போது காவிரி நீர் கிடைக்காமல் பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் விதைகள் முளைக்காமல் கருகும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் காவிரி மத்திய வல்லுநர் குழுவும் தமிழகத்தை தொடர்ந்து ஒருதலைப்பட்சமாக பார்க்கிறது'' என்று சரத்குமார் கூறியுள்ளார்.