தமிழகம்

உள்ளாட்சி தனி அலுவலர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பி.டி.ரவிச்சந்திரன்

உள்ளாட்சிகளில் தனி அலுவலர்கள் பொறுப்பேற்றதால், மக்கள் இனி தங்கள் தேவைகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுடன் தொடர்புகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட உள்ளாட்சிகளில் தனி அலுவலர்கள் நேற்று முன்தினம் பொறுப்பேற்றனர். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பொறுப்பில் இருந்ததற்கும், அதிகாரிகள் கையில் நிர்வாகம் இருப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன.

திண்டுக்கல்லில் மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவி வகித்தபோது பொது, செலவுக் கணக்கு களுக்கு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெறவேண்டும். வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளும் முன், அதற்கு ஒப்புதல் பெறவேண்டும். மாநகராட்சி அல்லது நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வரிகளை உயர்த்த, இதுவரை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். வாக்கு அரசியலை கணக்கில் கொண்டு அவ்வாறு செய்தனர். இந்நிலையில், இனி அரசின் ஆலோசனைப்படி தனி அலுவலர் ஒருவரே வரிகளை உயர்த்த ஒப்புதல் அளிக்கலாம்.

பொதுமக்கள் அந்தந்த பகுதி கவுன்சிலர்களை நாடி, தங்கள் பிரச்சினை களை கூறி வந்தனர். இனி நேரடியாக மாநகராட்சி, நகராட்சி அல்லது பேரூராட்சி அலுவலகங்களுக்கு சென்று, தங்கள் குறைகளை சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்களிடம் தெரிவிக்கலாம். தாமதமானால் சம்பந் தப்பட்ட அலுவலகத்தின் உயர் அதிகாரியை சந்தித்து முறையிடலாம். தற்போது மக்களுக்கும், உள்ளாட்சி அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கும் நேரடி தொடர்பு ஏற்பட்டுள்ளது.

வாக்கு அரசியலை கணக்கில்கொண்டு, உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் அழுத்தம் காரணமாக நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை முழுமையாகச் செய்யாமல் அவ்வப்போது கண் துடைப்பாகச் செய்து வந்தனர். இனி எந்த தடையும் இன்றி, ஆக்கிரமிப்புகளை அகற்றலாம். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அழுத்தம் காரணமாக, குறிப்பிட்ட சிலருக்கே ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டு வந்தன. இனி எந்தவித ஒளிவுமறைவின்றி வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தம் விடப்படும்.

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ‘எதிர்பார்ப்பை’ ஒப்பந்ததாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை என்பதால், வேலைகளின் தரமும் மேம்படும்.

மொத்தத்தில் தாமதமின்றி எந்த முடிவையும் உடனுக்குடன் தனி அலுவலரால் எடுக்க முடியும். கிராம ஊராட்சிகளில் ஊராட்சித் தலைவரிடம் இருந்த காசோலை அதிகாரம், இனி சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வந்துவிடும். இதனால் நிதி கையாளுவதை கவனமாக மேற்கொள்வார்.

முறைகேடு நடந்தால் தணிக்கையில் சிக்கி விடுவர் என்பதால் நிதியை வீணடிக்க வாய்ப்பில்லை. அதேநேரம், உள்ளாட்சி அளவில் ஆளும் கட்சி நிர்வாகிகளின் நெருக்குதலுக்கு அதிகாரிகள் அடிபணியக் கூடாது.

இதுபற்றி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருந்தபோது, அதிகாரிகளால் தனிப்பட்ட முடிவு எடுக்க முடியாமல் இருந்தது. மேலும் அரசின் ஆலோசனைகளைக் கூட உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒப்புதல் கிடைக்காததால், சிலவற்றை செயல்படுத்த முடியவில்லை. தற்போது எந்த அழுத்தமும் இன்றி, அதிகாரிகள் பணி செய்யலாம். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் பொறுப்பை, சுமையாக நினைக்காமல், மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பாக கருதினால் அதிகாரிகளால் பல நல்ல திட்டங்கள் எந்தவித தொய்வும் இன்றி நிறைவேற்றப்படும் வாய்ப்புள்ளது என்றார்.

மொத்தத்தில் உள்ளாட்சிப் பிரதிநி திகளால் சாதிக்க முடியாததை, தனி அலுவலர்கள் திறம்படச் செயல்பட்டு நகரின் வளர்ச்சியில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி அக்கறை காட்ட வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SCROLL FOR NEXT