சென்னை: "மதுரைவீரன் உண்மை வரலாறு" புத்தகத்தை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
"மதுரை வீரன் உண்மை வரலாறு " என்ற புத்தகத்தை குழந்தை ராயப்பன் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நூலை ஆதித் தமிழர் பேரவை என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் ஆட்சேபணைக்குரிய, திரித்து எழுதப்பட்ட தகவல்களைக் கொண்டதாக உள்ளது.
பல சமூகத்தினரை விமர்சனம் செய்வதாகவும் சாதியவாதத்திற்கு காரணம் என்று குற்றம்சாட்டுவதாகவும் உள்ளது. எனவே, இந்தப் புத்தகங்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் புத்தகத்தை எழுதிய குழந்தை ராயப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார் .
அவர் தாக்கல் செய்த மனுவில், "நான் ஒரு சமூக ஆர்வலர், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல புத்தகங்களை எழுதியுள்ளேன். நான் எழுதிய "மதுரை வீரன் உண்மை வரலாறு" என்ற புத்தகம் மதுரை வீரனின் வீரத்தை குறிப்பிட்டு எழுதப்பட்டது. சாதி ரீதியாக எதுவும் இல்லை. இந்த புத்தகம் அனைத்து தரப்பினரின் வரவேற்பை பெற்ற புத்தகம். தன்னிடம் உரிய விளக்கம் கேட்கப்படாமல் இந்த புத்தகத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தடையை நீக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது .அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி, "2000 புத்தகங்கள் விற்பனையாகிவிட்டது. ஜனநாயக நாட்டில் பேச்சுரிமைக்கு தடை விதிக்க முடியாது" என்று வாதிட்டார் . மேலும், ஏற்கெனவே பெருமாள் முருகன் எழுதிய "மாதொருபாகன்" தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த உத்தரவின்படி இதுபோன்ற புத்தகங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் அதுபோல் ஏதாவது நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதா? அந்த குழுவில் யாரெல்லாம் நிபுணர்கள் உள்ளனர்? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, இதுதொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.