சென்னை: சென்னை திருவல்லிக்கேணி சிஎன்கேசாலையில் உள்ள குப்பை தொட்டியில் சணல் பையில் பச்சிளம் குழந்தையின் சடலத்தை தெரு நாய்கள் இழுத்துச் செல்வதாக திருவல்லிக்கேணி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல் உதவி ஆணையர் எம்.எஸ். பாஸ்கர் தலைமையில் ஆய்வாளர் கலைச் செல்வி மற்றும் போலீஸார் சம்பவ இடம் விரைந்து, குப்பை தொட்டியில் கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்டனர்.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் கவிதா என்ற பெண்ணுக்கு இறந்த நிலையில் பிறந்த குழந்தையை அவரது கணவர் தனுஷ் குப்பைத் தொட்டியில் வீசி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து தனுஷிடம் போலீஸார் நடத்திய விசாரணையின்போது, “கவிதா எனக்கு 2-வது மனைவி. முதல் மனைவி இறந்துவிட்டார். அவருக்கு பிறந்த குழந்தையும் இறந்துவிட்டது. சிறு, சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நான், சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். பின்னர் வெளியே வந்தவுடன் கூலி வேலைக்கு சென்று திருந்தி வாழ்கிறேன்.
இந்நிலையில் 2-வது மனைவிக்கு பிறந்த குழந்தையும் இறந்துவிட்டதால், துக்கம் தாங்க முடியாமல் இருந்தேன். மேலும் குழந்தையை அடக்கம் செய்யவும் பணம் இல்லாததால், சணல் பையை வாங்கி அதில் குழந்தையை போட்டு குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு வந்தேன்” என தங்களிடம் வாக்குமூலமாக கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
தனுஷுக்கு உதவி ஆணையர் எம்.எஸ்.பாஸ்கர் ஆறுதல் கூறினார். மேலும், சென்னை காவல் ஆணையர் தொடங்கி வைத்த ‘காக்கும் கரங்கள்’ அமைப்பில் உள்ள உறவுகள் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பச்சிளம் குழந்தையை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி பச்சிளங் குழந்தை உடல் கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.