சென்னை: சென்னை எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட சில முக்கிய ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ உதவி மையங்கள் உள்ளன. இவற்றில், ரயில் பயணிகளுக்கு திடீரெனஏற்படும் காயம், மாரடைப்பு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு முதலுதவி அளிக்கப்படுகிறது. மேலும், அவசர சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், மேலும் பல நிலையங்களில் மருத்துவ உதவிமையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘பயணிகள் அதிகமாக இருக்கும் ரயில் நிலையங்களில், இலவச மருத்துவ உதவி மையங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில், விழுப்புரம், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய 5 நிலையங்களில் இலவச மருத்துவ உதவி மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவமனைகள் சார்பில், இம்மையங்கள் அமைக்கப்படும்’’ என்றனர்.