புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணியை நேற்று தொடங்கி வைத்தார் மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி. 
தமிழகம்

ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தாங்களாகவே திருந்த வேண்டும்: அமைச்சர் ரகுபதி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்கள் தாங்களாகவே திருந்த வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டையில் நேற்றுமாலை நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியதாவது:

தமிழகத்தில் போதைப் பொருட்களை விற்பவர்கள் மீதும், அதற்குஉறுதுணையாக இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.

சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை ஒழிக்க நீதிமன்ற உத்தரவுப்படி கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு, அதன்பிறகு இதை முழுமையாக ஒழிக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டுவரப்படும்.

நிச்சயம் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி ஒழிக்கப்படும். ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்களாகவே பார்த்து திருந்த வேண்டும் என்றார்.

முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் திருமயம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் ரகுபதி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் போதைப்பொருட்களை முழுமையாக ஒழிக்கவேண்டும் என்று தமிழக முதல்வர்சிறப்பு கூட்டம் நடத்தியுள்ளார். அதன் மூலம் பல்வேறு வழிகாட்டுநெறிமுறைகளையும் அலுவலர்களுக்கு தெரிவித்துள்ளார்.

போதைப் பொருட்கள் எந்த மாநிலத்தில் இருந்தும், எந்த ரூபத்தில் நுழைந்தாலும் அதைத்தடுத்தாக வேண்டும்.போதைப்பொருள் விற்பனை செய்வோரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

போதைப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் தண்டனைக்கு உள்ளாவார்கள்.

காவல் துறையினரும் தங்களது கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும். போதைப் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பதற்காகவே தமிழகத்தில் 12சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.

இவற்றை 2 மாவட்டங்களுக்கு ஒரு நீதிமன்றம் வீதம் உருவாக்குவதற்கு தமிழகமுதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்.

SCROLL FOR NEXT