உதகை - அவலாஞ்சி வழித்தடத்தில் மண் சரிவால் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, கூடலூர், பந்தலூர், குந்தா, உதகை ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மழையின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. உதகை அருகே கல்லக்கொரை கிராமத்திலிருந்து பி.மணியட்டி கிராமத்துக்கு செல்லும் சாலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 100 மீட்டர் அளவுக்கு மண் சரிவு ஏற்பட்டது.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மண் அரிப்பால் சாலையை ஒட்டியுள்ள தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த காய்கறிகள் அடித்துச் செல்லப்பட்டன.
இதையடுத்து, அப்பகுதியில் நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டனர். சாலை பழுதடைந்துள்ளதால், மறுபுறத்தை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மேலும், சாலையோரம் அபாயகரமான நிலையிலுள்ள மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் கூறும்போது, "கல்லக்கொரை-பி.மணியட்டி சாலை மண் அரிப்பால் பழுதடைந்துள்ளது. தடுப்புச் சுவர் கட்ட வேண்டும். தற்காலிகமாக சாலையின் மறுபுறம் அகலப்படுத்தப்பட்டு, வாகனப் போக்குவரத்தை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றார்.
இதற்கிடையே, உதகை - அவலாஞ்சி சாலையில் பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் சென்று மரத்தை வெட்டி அகற்றிய பின்னர் போக்குவரத்து சீரானது.
இதேபோல, பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலைகளிலும் மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இவற்றை உடனுக்குடன் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி வருவதால், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை.
மேலும், சாலையோரங்களில் உள்ள மழை நீர் கால்வாய்களும் சீரமைக்கப்பட்டு வருவதால், பெரும்பாலான இடங்களில் மண் சரிவு ஏற்படுவது தவிர்க்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் மின் கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுவதால் மின் தடை ஏற்பட்டு வருகிறது.
உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதால், சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தேயிலை தோட்டங்கள் மற்றும் மலை காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் மழைமற்றும் குளிரால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழை, கடும் குளிரால்,உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மழை அளவு (மி.மீ.)
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக நடுவட்டத்தில் 128 மில்லி மீட்டர் மழை பதிவானது.
கூடலூர், தேவாலா - தலா 107, அவலாஞ்சி - 64, கிளன்மார்கன் - 62, குந்தா - 59, பந்தலூர் - 35, எமரால்டு - 28, சேரங்கோடு - 20,கேத்தி - 14, ஓவேலி -11, உதகையில்- 7.9, மி.மீ. மழை பதிவானது.