முத்துராமலிங்கம் 
தமிழகம்

காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: ராமநாதபுரம் விவசாயிகள்

கி.தனபாலன்

காவிரி நீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரியிலிருந்து செல்லும் உபரிநீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலில் கலந்து வீணாகிறது. இந்த நீரை வறண்ட ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் 257 கி.மீ தூரத்துக்கு கால்வாய் வெட்டிக் கொண்டுவர காவிரி- வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டமானது 100 ஆண்டு கனவுத் திட்டமாகும். ரூ.14,000 கோடியில் படிப்படியாக நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் 2008-09-ம் ஆண்டில் திமுக அரசு நிதி ஒதுக்கீடு செய்து, காவிரி கட்டளை கதவணையில் காவிரியாற்றின் குறுக்கே 1 கி.மீ. தூரத்துக்கு 98 ஷட்டர்களும், அணை கட்டும் பணியை தொடங்கியது.

இதையடுத்து 2014-ல் அதிமுக அரசு ரூ. 243 கோடி நிதி ஒதுக்கி கட்டளைக் கதவணையை கட்டி முடித்தது. 2021-ல் இத்திட்டத்துக்கு அதிமுக அரசு ரூ. 700 கோடி நிதி ஒதுக்கிப் பணியை தொடங்கியது. மீண்டும் திமுக அரசு பதவியேற்று 2021-22-ம் நிதியாண்டில் ரூ. 200 கோடி ஒதுக்கியது.

இந்நிதியில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கால்வாய் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது ஏராளமான மழைநீர் காவிரி ஆற்றின் வழியாக கடலில் கலந்து வீணாகிறது. எனவே, இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத் துள்ளனர்.

இது குறித்து கமுதி அருகே அ.தரைக்குடியைச் சேர்ந்த இயற்கை விவசாயியும், முல்லைப் பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப் பின் மாவட்டச் செயலாளருமான சி.முத்துராமலிங்கம் கூறியதாவது:

2021-22-ம் ஆண்டில் காவிரியிலிருந்து 4 லட்சம் கனஅடி வெள்ளநீர் கடலுக்குச் சென்றது. தற்போது ஜூலையில் 85,000 கன அடி கடலுக்குச் சென்றது. இது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் சுமார் 2 லட்சம் கனஅடி நீர்வரை காவிரியிலிருந்து கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது.

எனவே, காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். ரூ. 14,000 கோடி செலவிலான இத்திட்டத்துக்கு குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும், என்றார்.

SCROLL FOR NEXT