ரேஷன் பொருட்கள் விநியோகம் சரியான முறையில் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் பன்னிரெண்டு நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ரேஷன் பொருட்களின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாமாயில், பருப்பு வகைகள், மண்ணெண்ணெய் போன்ற பல்வேறு பொருட்கள் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளது வேதனைக்குரியது.
அதேபோல் விநியோகிக்கப்படும் அரிசி தரமில்லாமல் புழு பூச்சிகள் நிறைந்தும், சாப்பிட பயன்படுத்த முடியாத தரமில்லாத அரிசி வழங்கபடுவதாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மக்கள் குறை கூறும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவி காலம் முடிந்து போன நிலையில், புதிதாக அதிகாரிகளை உடனடியாக நியமித்து இதுபோன்ற அடிப்படை தேவைகளை கவனிக்க வேண்டியது அவசியம்.
ஆனால் மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பின் இந்த அரசாங்கம் முற்றிலும் செயலிழந்த அரசாக செயல்படுவதால், மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் தீபாவளிக்கு சிறிது நாட்களே உள்ள நிலையில் மத்திய அரசு அறிவித்தபடி, அரசு அதிகாரிகளுக்கு
வழங்கபடும் ஏழாவது கமிஷன் பரிந்துரைப்படி வழங்க வேண்டிய இடைக்கால நிதி முன்கூட்டியே தமிழக அரசு வழங்கினால் அரசு அதிகாரிகளுக்கு இந்த நிதி பயனுடையதாக அமையும்.
தீபாவளிக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு சரியான முறையில் திட்டமிட்டு பஸ் வசதிகளை ஏற்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். எனவே இந்த அரசு மக்கள் பிரச்சனைகளில் உடனடியாக கவனம் செலுத்தி ரேஷன் பொருட்களின் விநியோகத்தை சரிசெய்ய வேண்டும்.