தமிழகம்

மதுரை | அமைச்சர், மாவட்ட செயலாளர் இடையே மோதலால் திமுக நிர்வாகிகள் 2 பேர் பதவி பறிப்பு

செய்திப்பிரிவு

ஒன்றிய, பகுதிச் செயலாளர்கள் தேர்வில் அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்டச் செயலாளர் எம்.மணிமாறன் ஆதவாளர்கள் இடையேயான மோதலால் 2 பேரின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் மதுரை திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.மணிமாறனுக்கும் அமைச்சர் பி.மூர்த்திக்கும் நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட கட்சி செயல்பாடு தொடர்பாக பல்வேறு விசயங்களில் மோதல் போக்கு நிலவுகிறது.

தங்கள் ஆதரவாளர்களுக்கு பதவியைப் பெற்றுத்தர அமைச்சர் மூர்த்தியும், இதை முறியடித்து தனக்கு வேண்டியவர்களைப் பதவிக்குக் கொண்டுவர மணிமாறனும் முயற்சிப்பதால் கடும் போட்டி நிலவுகிறது.

இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறியது: திமுக உட்கட்சி தேர்தலில் பேரூராட்சி, நகராட்சிகளில் மணிமாறன் கை ஓங்கியது. ஒன்றியச் செயலாளர், பகுதி செயலாளர்கள் தேர்வில் அமைச்சர் பி.மூர்த்தியின் செல்வாக்கே எடுபட்டது.

இதனால் மற்ற மாவட்டங்களில் நிர்வாகிகள் தேர்வு முடிந்து 2 மாதங்களான நிலையில், இம்மாவட்டத்தில் இழுபறி நிலை காணப்பட்டது. தற்போது புதிய திருப்பமாக முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும், இதில் 2 பேர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே 3 ஆக பிரிக்கப்பட்ட திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு செயலாளர்களாக பெரியசாமி, ஜெயபால், வேட்டையன் உள்ளனர். மேலும் கள்ளிக்குடி ராமமூர்த்தி, டி.கல்லுப்பட்டி ஞானசேகர், திருமங்கலம் தனபாண்டியன், சேடபட்டி ஜெயச்சந்திரன், செல்லம்பட்டி சுதாகர் ஆகியோர் உள்ளனர். உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் பதவி காலியாக உள்ளது.

இவர்களில் திருமங்கலம் தனபாண்டியன், டி.கல்லுப்பட்டி ஞானசேகர் ஆகியோர் மீது புகார்கள் உள்ளதால் தொடர்ந்து ஒன்றியச் செயலாளர்களாக செயல்பட அனுமதிக்க முடியாது என மணிமாறன் எதிர்த்தார். இதற்கு அமைச்சர் பி.மூர்த்தி உடன்படாததால் கட்சித் தலைமை பேச்சு நடத்தியது. பலகட்ட பேச்சுக்குப் பின் ஞானசேகர் தவிர மற்றவர்களுக்கு மீண்டும் ஒன்றியச் செயலாளர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளி யாகும்.

மதுரை மாநகராட்சியில் புறநகர் தெற்கு மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் 4 பகுதி செயலாளர்களில் உசிலை சிவா, கிருஷ்ணபாண்டி, ஈஸ்வரன் ஆகியோர் மீண்டும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

அவனியாபுரம் வடக்கு பகுதிக்கு தற்போது பகுதி செயலாளராக உள்ள செந்தாமரைகண்ணனுக்கு கடும் போட்டி நிலவியது. முன்னாள் மண்டல தலைவர் விகே.குருசாமியின் உறவினர் மணிசேகரை மண்டல தலைவராக்க மணிமாறன் விரும்புகிறார். அப்படி நடந்தால் தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 மண்டல தலைவர்களும் ஒரே சமுதாயத்தவர்களாகிவிடுவர்.

செந்தாமரைகண்ணனை நியமித்த பின்னர் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களில் அவர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. இதை மாற்றினால் இனி வரும் தேர்தலில் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் செந்தாமரை கண்ணனின் பதவியும் பறிக்கப்படும் என்றே தகவல் வருகிறது.

அமைச்சர் ஆதரவாளர்கள் 2 பேரின் பதவியை பறித்ததில் மணிமாறன் வெற்றி பெற்றுள் ளதும், மற்றவர்களுக்கு பதவியைப் பெற்றுத்தந்ததில் மூர்த்தி செல்வாக்கை காட்டியுள்ளதும் கட்சியினரிடையே பேசு பொருளாகியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தது முதலே மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தில் தங்களுக்கிடையே போட்டி அரசியல் மட்டுமே நடத்தி வருவது கட்சி வளர்ச்சிக்கு நல்லதல்ல. இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT