திருச்சி: மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரை நீரேற்று நிலையங்களை அமைத்து வறட்சியான பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை நிரப்பினால் நூற்றுக்கணக்கான டிஎம்சி தண்ணீர் கடலில் கலப்பதை தடுக்கலாம் என பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் ஜூலை 16-ம் தேதி மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதன் காரணமாக அணைக்குவரும் நீர் முழுவதுமாக திறக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஜூலை 16-ம் தேதி விநாடிக்கு 1.16 லட்சம் கன அடி, ஜூலை 18-ம் தேதி 1.29 லட்சம் கன அடி என அதிகரித்த நீர்வரத்து பின்னர் மாத இறுதியில் படிப்படியாகக் குறைந்தது. பின்னர் ஆக.1-ம் தேதி முதல் மீண்டும் அதிகரித்து 4-ம் தேதி 1.95 லட்சம் கன அடியாக அதிகரித்து, நேற்றைய நிலவரப்படி 1.50 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
80 சதவீதம் கடலுக்கு செல்கிறது
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் காவிரியில் திறக்கப்பட்டு, திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையிலிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் திறக்கப்படுகிறது. காவிரியில் ஏறத்தாழ 50 ஆயிரம் கன அடியும், மீதமுள்ள தண்ணீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றிலும் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக கொள்ளிடம் கரையோரத்தில் உள்ள தாழ்வான பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.
காவிரி மற்றும் கொள்ளிடத்தில் உபரியாக திறக்கப்படும் தண்ணீரில் 80 சதவீதத்துக்கு மேல் கடலில்தான் சென்று கலக்கிறது. உபரியாக வரும் இந்த தண்ணீரை நீரேற்று நிலையங்களை அமைத்து வறட்சியான பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை நிரப்பினால், அந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும் உயரும், உபரியாக கடலுக்குச் செல்லும் தண்ணீர் மக்களுக்கும் பயன்படும் என்கின்றனர் மூத்த பொறியாளர்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் அ.வீரப்பன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: தமிழகத்தில் பாசனம்மற்றும் குடிநீருக்காக கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களிடம் கையேந்தி வருகிறோம்.
ஆனால், ஆண்டுதோறும் காவிரியில் உபரியாக வரும் தண்ணீர் மட்டும் ஏறத்தாழ 260 டிஎம்சி கடலில் சென்று கலக்கிறது. தற்போதும்கூட கர்நாடகத்திலிருந்து வரும் தண்ணீர் கடந்த ஒரு மாதத்தில் ஏறத்தாழ 100 டிஎம்சிக்கு மேல் கடலில் சென்று கலந்துள்ளது.
இதற்கு மாற்று ஏற்பாடாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் சில தடுப்பணைகளைக் கட்டலாம் என்ற யோசனையையும் சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால், இதற்கு காலதாமதமும், அதிக செலவும் ஏற்படும்.
இதற்கு பதிலாக கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ள நீரேற்று நிலையங்கள் போன்று மேட்டூரிலிருந்து மாயனூர் தடுப்பணை வரை இருபுறமும் தலா 2 வீதம் 4 நீரேற்று நிலையங்கள், மாயனூரிலிருந்து முக்கொம்பு வரை பக்கத்துக்கு தலா ஒரு நீரேற்று நிலையம், முக்கொம்பிலிருந்து கல்லணை வரை பக்கத்துக்கு ஒரு நீரேற்று நிலையம், கொள்ளிடத்தில் அணைக்கரை (கீழணை) அருகே ஒரு நீரேற்று நிலையம் அமைத்தால் ஏறத்தாழ 100 டிஎம்சி தண்ணீரை வறட்சியான பகுதிகளுக்கு கொண்டு சென்று, அங்குள்ள நீர்நிலைகளை நிரப்பலாம்.
எப்போதெல்லாம் மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் அதிக அளவில் வருகிறதோ, அப்போது மட்டும் இந்த நீரேற்று நிலையங்கள் மூலம் தண்ணீரை பிற இடங்களுக்கு கொண்டு செல்லலாம். இதை அரசு உறுதியாகவே விவசாயிகளுக்குச் சொல்லலாம்.
ஆண்டுதோறும் 8 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் கடலுக்குச் செல்ல வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். நாம் 10 டிஎம்சியாகக்கூட கடலில் விடலாம். ஆனால், ஆண்டுக்கு 260 டிஎம்சிக்கு மேல் கடலில் வீணாக விடுவது நம்மை தொடர்ந்து நீர் பற்றாக்குறை மாநிலமாகவே வைத்திருக்கும்.
தமிழக அரசு இதுபோன்ற மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து செயல்படுத்தினால், தமிழகத்தை பசுமை மாநிலமாக மாற்றலாம் என்றார்.