தமிழகம்

கோத்தகிரி அருகே சிறுத்தை தாக்கியதில் 4 வயது சிறுமி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கோத்தகிரி: கோத்தகிரி அருகே தனியார் எஸ்டேட்டில் சிறுத்தை தாக்கியதில், சிறுமி உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் நீலகிரி வனக்கோட்டத்துக்கு உட்பட்டது தேனாடுகம்பை. இந்த பகுதிக்கு உட்பட்ட அரக்காடு பகுதியில் நேற்று பகலில் குழந்தை ஒன்றை சிறுத்தை தாக்கி இழுத்துச் சென்றதாக வந்த தகவலையடுத்து வன ஊழியர்கள் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, தேயிலை தோட்டத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி கிஷாந்த் என்பவரின் 4 வயது குழந்தை சரிதா சுயநினைவின்றி கழுத்தில் ரத்த காயத்துடன் கிடந்தார்.

வன ஊழியர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக உதவி வனப்பாதுகாவலர் சரவணகுமார் கூறும்போது, ‘‘சிறுமியை விலங்கு தாக்கிய இடத்தை பார்த்ததில் சிறுத்தை அல்லது புலியின் காலடி தடங்கள் இருந்தன.

எனவே, விலங்கு தாக்கி இருக்கலாம் என உறுதி செய்யப்பட்டது. அந்த சிறுமி இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக அருகிலுள்ள தேயிலை தோட்டத்துக்குச் செல்லும்போது இந்த சம்பவம் ஏற்பட்டது என சிறுமியின் தாயார் கூறினார்’’ என்றார்.

SCROLL FOR NEXT