தமிழகம்

உதகையில் விளைநிலங்களில் தேங்கிய மழை நீர்: காய்கறிகள் அழுகியதால் விவசாயிகள் வேதனை

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்ததால், உதகை, குந்தா தாலுகாக்களில் மலை காய்கறிப் பயிர்களும், கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் நெல், வாழை ஆகிய பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கின. கடந்த இரு நாட்களாக மழையின் தீவிரம் குறைந்தும், விளை நிலங்களில் தேங்கிய தண்ணீர் வடியவில்லை. இதனால் அங்கு பயிரிடப்பட்டிருந்த காய்கறிகள் அழுகத் தொடங்கிவிட்டன.

குறிப்பாக எமரால்டு, முத்தொரை, பாலாடா, கப்பத்தொரை, நஞ்சநாடு, கல்லக்கொரை ஆடா, கேத்தி, பாலாடா பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கேரட், பீட்ரூட் பயிர்கள் அழுகிவிட்டன. அப்பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அழுகாமல் நல்லநிலையில் உள்ள காய்கறிகளை அவசர கதியில் விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, ‘‘சந்தையில் கடந்த மாதம் கேரட் கிலோ ரூ.60 வரை விற்பனையானது. விலை மேலும் உயரக்கூடும் என்ற எண்ணத்தில், கேரட் அறுவடையை தள்ளிப்போட்டிருந்தோம். கடந்த 10 நாட்களாக பெய்த மழையால், பயிர்கள் முழுவதும் நாசமாகிவிட்டன. பயிர் சேதங்களை விரைந்து கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க தோட்டக்கலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘சேதமடைந்த விளை நிலங்களை அலுவலர்கள் கணக்கெடுத்து வருகின்றனர். இந்த கணக்கெடுப்பு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்படும். அரசு நிர்ணயிக்கும் நிவாரணத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும்,’’ என்றனர்.

SCROLL FOR NEXT