தமிழகம்

வேலைவாய்ப்பு தொடர்பாக சமூக வலைதள தகவலை நம்ப வேண்டாம்: வருமான வரித் துறை எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: வேலைவாய்ப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்று வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.

வருமான வரித் துறையில், வருமான வரி அதிகாரி பணியிடம் நிரப்பப்பட உள்ளதாகவும், இது தொடர்பான பணி நியமன விதிமுறைகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கடிதம் சிலருக்கு வழங்கப்படுவதாகவும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இது முற்றிலும் தவறானது. வருமான வரி அதிகாரி பணியிடம் முற்றிலும் பதவி உயர்வால்தான் நிரப்பப்படுகிறது. இப்பதவிக்கு நேரடியாக ஆட்கள் சேர்க்கப்படுவதில்லை.

மேலும், வருமான வரித் துறையில் உள்ள பல்வேறு பணிகளுக்கான ஆட்கள் சேர்ப்பு, மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்எஸ்சி) மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. வருமான வரித் துறையில் உள்ள ‘குரூப் ஏ’ பதவிகளுக்கான அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்கான செயல்முறை, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, வேலைவாய்ப்பு தொடர்பாக எஸ்எஸ்சி, யுபிஎஸ்சி-ன் அதிகாரப்பூர்வ வலைதளங்களை மட்டுமே பார்க்கவும். அல்லது சம்பந்தப்பட்ட அலுவலகங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

வருமான வரித் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறும் இடைத்தரகர்கள், நிறுவனம் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் அலுவலகத்தின் கூடுதல் வருமான வரி ஆணையர் (நிர்வாகம் மற்றும் வரி செலுத்துவோர் சேவை) வி.வித்யாதர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT