தமிழகம்

பாஜக சார்பில் 50 திரையரங்குகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் திரைப்படம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பாஜக சார்பில் 50 திரையரங்குகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை தொடர்பான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்ற பிரதமரின் வேண்டுகோளை செயல்படுத்துமாறு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியினரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன்படி, மாநிலம் முழுவதும் 50 திரையரங்குகளில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை குறித்த திரைப்படங்கள், வரும் 15-ம் தேதி வரை இலவசமாகத் திரையிடப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள திரையரங்கில், நடிகர் சிவாஜிகணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது.

இப்படத்தை தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன், கலை, கலாச்சாரப் பிரிவு செயலாளர் பெப்சி சிவா, தென் சென்னை மாவட்டத் தலைவர் வி.காளிதாஸ் உள்ளிட்டோர், கட்சியினர் மற்றும் மக்களோடு கண்டு ரசித்தனர்.

இதுகுறித்து கரு.நாகராஜன் கூறும்போது, “மாநிலம் முழுவதும் 50 திரையரங்குகளில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த படங்களைத் திரையிட உள்ளோம். டிஜிட்டல் தொழில்நுட்பம் காரணமாக, சில படங்களைத் திரையிடுவதில் சிக்கல் உள்ளது. அடுத்து, கப்பலோட்டிய தமிழன் படத்தை திரையிட முயற்சித்து வருகிறோம். இதன் மூலம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது” என்றார்.

SCROLL FOR NEXT