மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தென் மாவட்ட போலீஸாருக்கு 11 முதல் 13-ம் தேதி வரை 3 நாள் விடுப்பு வழங்கப்படுவதாக, காஞ்சிபுரம் வடக்கு மண்டல டிஐஜி சத்யபிரியா தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 4,500 போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவடைந்ததையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் படிப்படியாக அவரவர் மாவட்டங்களுக்குச் செல்வதற்கான உத்தரவுகளை காஞ்சி வடக்கு மண்டல டிஐஜி சத்யபிரியா அறிவித்தார்.
போட்டி அரங்க வளாகத்தில் பேசிய அவர், தொலைதூர மாவட்டங்களில் இருந்து வந்துள்ள போலீஸார், மீண்டும் அந்தந்த பகுதிகளுக்குச் செல்ல வாகன வசதிகளுக்கான உத்தரவுகளை பிறப்பித்தார்.
மேலும், தொலைதூரத்தில் இருந்து காவல் பணிக்கு போலீஸார் வந்திருந்ததால், பயண நேரம் மற்றும் ஓய்வுக்காக 11 முதல் 13-ம்தேதி வரை 3 நாட்கள் விடுப்பு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து, டிஐஜி சத்யபிரியா கூறும்போது, “போட்டி நிறைவடைந்தாலும், வீரர்கள் சிலர் கூடுதலாக ஓரிருநாட்கள் விடுதிகளில் தங்க உள்ளனர். அதனால், வடக்கு மண்டல போலீஸார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
அனைத்து வெளிநாட்டு வீரர்களும் புறப்பட்டுச் சென்றதும் வடக்கு மண்டலத்துக்குட்பட்ட போலீஸாருக்கும் விடுப்பு வழங்கப்படும். தற்போது 2,500-க்கும் மேற்பட்ட போலீஸார் அந்தந்த மாவட்டங்களுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டனர்” என்றார்.