தமிழகம்

முதல்வர் உடல்நிலை பற்றி அவதூறு: பிரான்ஸ் பெண் தமிழச்சி மீது மதுரையிலும் வழக்கு

செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு பரப்பியதாக பிரான்ஸ் நாட்டு பெண் தமிழச்சி மீது சென்னையை தொடர்ந்து மதுரையிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதித்து, சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சூழலை பயன்படுத்தி ஒரு பெண், முதல்வர் பற்றி அவதூறு பரப்பும் நோக்கில் செயல்பட்டார். அவர் முதல்வர் பற்றிய சில தகவல்களை ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. அந்த பெண் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழச்சி என்ற பெயர் கொண்டவர் எனவும் தெரிந்தது. இந்த பெயர் உண்மையானதுதானா என்று தெரியவில்லை.

இதுகுறித்து அதிமுகவினர் கொடுத்த புகாரின் பேரில், தமிழச்சி மீது சென்னை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் மதுரை திருப் பரங்குன்றம் பகுதி அதிமுக இலக்கிய அணி செயலாளர் மோகன்தாஸ் என்பவரும் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் தமிழச்சி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், மதுரை நகர் சைபர் கிரைம் போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், சைபர் கிரைம் ஆய்வாளர் செந்தில் இளந்திரையன், பிரான்ஸ் நாட்டு பெண் என்று கூறப்படும் தமிழச்சி மீது, தேவையற்ற முறையில் பிறர் மீது அவதூறு பரப்புதல் (506, 507) உட்பட 3 பிரிவுகளின்கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.

SCROLL FOR NEXT