நாட்டின் வளர்ச்சிப் பணிகளை கவனிக்காமல் மூட நம்பிக்கையை வளர்க்கும் கூடாரமாக அதிமுக அரசு செயல்படுவது கண்டிக்கத்தகக்து என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை சரியின்றி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில், அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்று அதிமுகவினர் சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் பால் குட ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60 வயது மதிக்கத்தக்க கமலம்மாள் என்னும் பெண் மரணமடைந்துள்ளார். மேலும், சில பெண்கள் மயக்கமடைந்துள்ளனர். இச்செய்தி மிகுந்த வேதனையை அளித்துள்ளது.
இத்தகைய மனித உரிமை மீறல்களில் அதிமுகவினர் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். தேர்தல் காலங்களில் பணம், பரிசுப்பொருட்களை கொடுத்து பொதுமக்களை லாரி, வேன், பஸ் போன்றவற்றில் ஏற்றிச் சென்று ஒரு இடத்தில் நிற்க வைத்தனர். அப்போதும், பலர் மயக்கமடைந்தனர். இப்போது பால்குட ஊர்வலம், சிறு பிள்ளைகளுக்கு பச்சை குத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். நாட்டின் வளர்ச்சிப் பணிகளை கவனிக்காமல் மூட நம்பிக்கையை வளர்க்கும் கூடாரமாக அதிமுக அரசு செயல்படுவது கண்டிக்கத்தகக்து.
மேலும், பருவமழை தொடங்கவுள்ள நிலையில் ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் தேவையற்ற அரசியலை செய்யக் கூடாது. நீர்நிலைகளை தூர்வாறி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். அண்டை மாநிலங்களை குறை சொல்லாமல், தமிழகத்தின் நதிகளை இணைத்து மழைநீர் கடலில் கலக்காமல் பாதுகாக்க வேண்டும்.
உள்ளாட்சி பதவிகளின் காலம் முடிவடைந்ததால், அரசு அலுவலர்கள் பொறுப்பேற்றுள்ளனர். லஞ்ச லாவண்யங்கள் இல்லாமல் ஆட்சிப்பணியை நடத்த வேண்டும். இவற்றை விடுத்து அதிகாரம் தங்கள் கைகளில் உள்ளது என்பதற்காக மக்களை பகடைக் காயாக பயன்படுத்தக் கூடாது. பகுத்தறிவு கொள்கைகளை போதித்த பெரியார், அண்ணா வழிவந்த கட்சி மக்களை மூடர்களாக்குவது கண்டிக்கத்தக்கது'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.