திண்டுக்கல்: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தந்தவரும், அதிமுக தொடங்கியதும் நடைபெற்ற முதல் தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி.யான கே.மாயத்தேவர் (88) உடல்நலக் குறைவால் சின்னாளபட்டியில் நேற்று காலமானார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள டி.உச்சப்பட்டி கிராமத்தில் 1934-ம் ஆண்டு பிறந்தவர் கே.மாயத்தேவர். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணிபுரிந்தார்.
இவர், எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியது முதல் அவருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். கட்சி தொடங்கிய பிறகு முதன்முதலில் 1973-ம் ஆண்டு திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதில் அதிமுக சார்பில் மாயத்தேவரை, எம்.ஜி.ஆர். போட்டியிடச் செய்தார். அதிமுகவின் முதல் வேட்பாளர்இவரே. அப்போது மதுரை மாவட்டத்தில் இருந்தது தற்போதைய திண்டுக்கல் மாவட்டம்.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுகவுக்கு சின்னம் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. இப்பொறுப்பை மாயத்தேவரிடமே ஒப்படைத்தார் எம்ஜிஆர். அப்போதைய சுயேச்சை சின்னமான இரட்டை இலையை மாயத்தேவர் தேர்வு செய்தார்.
இச்சின்னத்தில் போட்டியிட்ட கே.மாயத்தேவர் அமோக வெற்றி பெற்றார். இந்தவெற்றிச் சின்னத்தைக் கண்டறிந்து அதிமுகவுக்கு வழங்கியவர் மாயத்தேவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து 1977-ல் நடந்த மக்களவைத் தேர்தலிலும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு 2-வது முறையாக வெற்றி பெற்றார். பின்னர் மொரார்ஜி தேசாய் ஆட்சி கவிழ்ந்து சரண்சிங் தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது.
அப்போது மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெற்றது. தனக்கு மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்த மாயத்தேவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தனக்கு கிடைக்க வேண்டிய பதவியை சத்தியவாணி முத்துவுக்கு எம்ஜிஆர் வாங்கிக் கொடுத்தார்.
இதனால் கோபம் அடைந்த மாயத்தேவர் அதிமுகவில் இருந்து விலகினார். இதன் பிறகு திமுகவில் இணைந்து 1980-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டார். திமுகவில் மாவட்டச் செயலாளர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
பிரதமர்கள் இந்திரா காந்தி, வாஜ்பாய் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் அன்பைப் பெற்றவர் மாயத்தேவர்.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள அவரது வீட்டிலேயே தங்கியிருந்தார். பல ஆண்டுகளாக பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் சின்னாளபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் மாயத்தேவர் காலமானார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி, செந்தில்குமரன் என்ற மகன், சுமதி என்ற மகள் உள்ளனர்.
மூத்த மகன்வெங்கடேசன் 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். மாயத்தேவரின் உடல் அடக்கம் இன்று (புதன்கிழமை) மாலை சின்னாளபட்டியில் உள்ள மயானத்தில் நடைபெற உள்ளது.
தலைவர்கள் இரங்கல்
மாயத்தேவர் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, முன்னாள் முதல்வர் பழனிசாமி, அதிமுகவின் மூத்த முன்னோடி மாயத்தேவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபாஉள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சின்னாளபட்டியில் வீட்டில் வைக்கப்பட்டுள்ள மாயத்தேவர் உடலுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்சீனிவாசன், அதிமுக மற்றும் திமுகவினர், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
| இரட்டை இலையை தேர்வு செய்தது ஏன்? எம்ஜிஆரிடம் காரணம் சொன்ன மாயத்தேவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அதிமுகவுக்கான சின்னம் தேர்வின்போது, எந்த சின்னத்தை நான் தேர்வு செய்ய வேண்டும் என மாயத்தேவர், எம்ஜிஆரிடம் கேட்டுள்ளார். அதற்கு, நீங்களே பார்த்து சரியான ஒரு சின்னத்தை தேர்வு செய்துவிடுங்கள் எனக் கூறி முழு பொறுப்பையும் மாயத்தேவரிடமே விட்டுவிட்டார் எம்.ஜி.ஆர். இதில் முழு கவனம் செலுத்தி அப்போது இருந்த சுயேச்சை சின்னங்களில் இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்தார் மாயத்தேவர். பின்னாளில் இச்சின்னம் புகழ்பெற்ற பிறகு, நீங்கள் இந்த சின்னத்தை தேர்ந்தெடுக்க என்ன காரணம் என எம்ஜிஆர் ஒருமுறை மாயத்தேவரிடம் கேட்டார். அதற்கு, இங்கிலாந்தில் வின்சென்ட் சர்ச்சில் வெற்றியை குறிக்கும் விதமாக ‘வி’ வடிவில் தனது இரண்டு விரலை உயர்த்திக் காண்பிப்பார். இது மக்களிடம் எளிதில் சென்றடைந்தது. இதேபோல் நாமும் இரட்டை இலை சின்னத்தை பெற்றால் வெற்றிக்கு அடையாளமாக இரண்டு விரலை காட்டுவதுடன், அது இரட்டை இலையை குறிக்கும் விதமாகவும் இருக்கும் என்பதால் இச்சின்னத்தை தேர்வு செய்ததாகத் தெரிவித்துள்ளார். |