திருப்பூர் காங்கயம் சாலையில் நேற்று நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, அமர்ஜீத் கவுர், நாராயணா, பினாய்விஸ்வம் மற்றும் ஆனி ராஜா ஆகியோருடன் மாநில செயலாளர் இரா.முத்தரசன். படம்: இரா.கார்த்திகேயன் 
தமிழகம்

திருப்பூர் | இந்திய கம்யூ. மாநில செயலராக முத்தரசன் 3-வது முறையாக தேர்வு

செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூரில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், மாநிலச் செயலாளராக இரா.முத்தரசன் 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாடு திருப்பூரில் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு, கட்சிக் கொடியேற்றி, மாநாட்டை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து 4 நாட்கள் இந்த மாநாடு நடந்தது. இந்த மாநாட்டின் தொடக்க நாள் நிகழ்வில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்வு நேற்று நடந்தது. இதையொட்டி, கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்ட மாநிலக்குழு கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில், கட்சியின் மாநிலக்குழு நிர்வாகிகளால் தொடர்ந்து 3-வது முறையாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இரா.முத்தரசன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், கட்சியின் கட்டுப்பாட்டு குழுத் தலைவராக கே.சுப்பராயன் தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கட்சித் தொண்டர்கள் பங்கேற்ற செம்படைப் பேரணி நேற்று மாலை திருப்பூரில் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மாநகரில் 4 மணி நேரத்துக்கும் மேலாக பேரணி நடந்தது. இதில் முழக்கங்கள் எழுப்பியபடி கட்சியினர் பங்கேற்றனர்.

ஸ்டாலின் வாழ்த்து

3-வது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள முத்தரசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமத்துவத்தை நோக்கிய பொதுவுடைமைப் பாதையில் நமது லட்சியத்தை நோக்கி தொடர்ந்து பீடு நடை போட வாழ்த்துகிறேன் என தனது ட்விட்டர் பதிவில் முதல்வர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT