சென்னை: மாவட்டம் தோறும் புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டுமென்று ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் உள்ள தனியார்ஓட்டலில் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.
சென்னை, காஞ்சி, சேலம்,வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்டபல்வேறு மாவட்டங்களில் இருந்துநிர்வாகிகள் பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். மாவட்ட வாரியாகநிலவரம் குறித்தும், தொண்டர்களின் மனநிலை குறித்து ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது, மாவட்டம் தோறும்சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை நேரில் சந்திக்க வேண்டுமென நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம், "பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதகமாக வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
தீர்ப்புக்குப்பின், சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறேன். அதற்கு முன்பாக மாவட்டம் தோறும் அதிக அளவில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்துநியமிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
கூட்டத்தை முடித்ததும் மாயத்தேவர் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் திண்டுக்கல் புறப்பட்டுச் சென்றார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், எந்த பொறுப்பும் இல்லாமல் இருப்பவர்களை தங்கள் பக்கம் அழைத்து வந்து பொறுப்புகளை கொடுப்பது மற்றும் நிர்வாகிகளை சந்திப்பதற்காக சென்னை மந்தைவெளியில் தனி அலுவலகம் பார்க்கும் பணியிலும் ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.