திண்டுக்கல்: அதிமுகவின் முதல் எம்.பி.யான மாயத்தேவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 88.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் முதன்முதலில் கட்சி ஆரம்பித்த பிறகு, திண்டுக்கல் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாயத்தேவர்.
வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த மாயத்தேவர் கடந்த சில ஆண்டுகளாக வீட்டிலேயே தங்கியிருந்தார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று உயிரிழந்தார். மறைந்த மாயத்தேவருக்கு அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இரட்டை இலையும் மாயத்தேவரும்: திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு 1973-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதிதாகத் தொடங்கப்பட்ட அதிமுக அந்தத் தொகுதியில் போட்டியிடும் என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர். வேட்பாளரின் செல்வாக்கு உள்ளிட்ட அம்சங்களைக் கணக்கிட்டுப் பார்த்த எம்ஜிஆர், மாயத்தேவரை வேட்பாளராக அறிவித்தார்.
அப்போது தனக்கான சின்னத்தைத் தேர்வுசெய்ய மதுரை மாவட்ட ஆட்சியரை அணுகினார் வேட்பாளர் மாயத்தேவர். அப்போது அவரிடம் 16 சுயேச்சை சின்னங்கள் காட்டப்பட்டன. அவற்றிலிருந்து இரட்டை இலையைத் தேர்வுசெய்தார் மாயத்தேவர். அந்த இடைத்தேர்தலில் மாயத்தேவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.