சென்னை: நோட்டீஸ் வழங்கிய பிறகும் மாநகராட்சிக்கு உரிய வாடகை மற்றும் வரி செலுத்தாத கடைகளுக்கு கட்டாயம் சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வில்லிவாக்கம் பகுதியில் 26.88 கோடி ரூபாய் மதிப்பிலும், யானைகவுனி ரயில்வே பாலம், ஸ்டீபென்சன் சாலையில் 34.81 கோடி ரூபாய் மதிப்பில், 9.98 கோடி ரூபாய் மதிப்பில் சிந்தாதரிப்பேட்டை அருணாச்சலம் சாலை ஆகிய இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணியினை மாநகராட்சி மேயர் பிரியா நேரில் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா, "சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் வாடகைக்கு கடை எடுத்துள்ளவர்கள் முறையாக உரிய தொகையினை செலுத்த வேண்டும். செலுத்த தவறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதலில் நோட்டீஸ் வழங்கப்படும். பிறகு வாடகை செலுத்தவில்லை என்றால் கடைகளுக்கு கட்டாயம் சீல் வைக்கப்படும்.
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னையில் பல்வேறு இடங்களில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்தும் வரும் நவம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். தி.நகர் ஆகாய நடை மேம்பாலம் வரும் அக்டோபார் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். விரைவில் மூன்று புதிய பாலங்கள் அமைப்பதற்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளது" என்றார்.