தமிழகம்

காஞ்சிபுரம் கோட்டத்தில் பேரிடர் மீட்புப் பணி பயிற்சி முகாம்

செய்திப்பிரிவு

இயற்கை பேரிடர் நிகழும்போது பாதிக்கப்படுபவர்களுக்கு உதவக் கூடிய தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்பயிற்சிக்கு மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தலைமை தாங்கினார்.

காஞ்சிபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட காஞ்சிபுரம், உத்திர மேருர், வாலாஜாபாத் மற்றும் பெரும்புதூர் வட்டங்களில் இயற்கை பேரிடர் நிகழ சாத்தியமுள்ள பகுதிகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் முகாமில் பங்கேற்றனர்.

மழை காரணமாக ஏரிகளில் உடைப்பு ஏற்படுதல், வெள்ளத் தால் சூழப்படுதல் போன்ற காலங்களில் உடனடியாக பேரிடர் மேலாண்மைக் குழுக்களுக்குத் தகவல் தெரிவித்தல், கூடுதல் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்த்தல், வெள்ளத்தால் சூழப்பட்ட மக்களை மீட்பது, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்பாக உடனடியாக முதலுதவி அளித்தல், பாதுகாப் பாக நிவாரண மையங்களுக்கு அழைத்துச் செல்லுதல் மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது உள்ளிட்டவை குறித்து முகாமில் விளக்கிக் கூறப்பட்டது.

காஞ்சிபுரம் சார் ஆட்சியர் அருண்தம்புராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) அருண்ராஜ், இந்திய செஞ்சிலுவைச் சங்க செயலர் பேராசிரியர் ராம மாணிக்கம் மற்றும் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT