பரந்தூர் புதிய விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களில் ஏகனாபுரம் கிராமத்தின் குடியிருப்பு பகுதிகளை விடுவிக்க வேண்டும் என காஞ்சிபுரம் ஆட்சியரிடம் மனு வழங்க வந்த கிராம மக்கள். 
தமிழகம்

பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவதில் குடியிருப்பு பகுதிகளை விடுவிக்க வேண்டும்: கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக, நிலம் கையகப்படுத்துவதில் இருந்து ஏகானாபுரம் குடியிருப்பு பகுதிகளை விடுவிக்குமாறு அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

காஞ்சிபுரம் பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

அரசு புறம்போக்கு நிலங்கள் போக 2 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும் 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு நிலங்கள் கையகப்படுத்தும்போது பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வளத்தூர், மடப்புரம், நெல்வாய், தண்டலம், ஏகனாபுரம், அக்கம்மாபுரம் உட்பட பல கிராமங்களில் இருந்தும் நிலங்கள் எடுக்கப்பட உள்ளன.

இந்தக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பலர் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டவர்கள். மேலும் பலர் கால்நடை வளர்ப்பவர்கள். நிலங்களை கையகப்படுத்தும்போது விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டி இருக்கும்.

மேலும் மேய்கால் புறம்போக்கு நிலங்களும் கையகப்படுத்தப்பட இருப்பதால் கால்நடைகளும் அதனை வளர்ப்போரும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது என்ற கருத்து எழுந்துள்ளது.

இந்நிலையில், நிலம் கையகப்படுத்தலுக்கு உள்ளாகும் ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் தங்களின் குடியிருப்பு நிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காஞ்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஏகனாபுரம் உள்ளிட்ட 12 கிராமங்களும் விவசாய பூமியாக விளங்கும் நிலையில் விமான நிலையத்துக்காக அனைத்து நிலங்களையும் மொத்தமாக கையப்படுத்துவதால் பரம்பரை பரம்பரையாக நாங்கள் விவசாயம் செய்து வரும் நிலங்கள் அனைத்தையும் மொத்தமாக இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையத்துக்கான வரைபடத்தில் நாங்கள் வசித்து வரும் 600 வீடுகளும் இடம்பெற்றுள்ளன. ஒரு திட்டத்துக்காக, ஒரு ஊராட்சியை காலி செய்வது பண்பாட்டை சிதைப்பதாக உள்ளது. அதனால், கிராம மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு ஏகனாபுரம் கிராமத்தின் மொத்த பரப்பளவான 950 ஏக்கரில், குடியிருப்பு பகுதிகளாக உள்ள 50 ஏக்கர் பகுதியை மட்டும் விடுவித்து, மீதமுள்ள நிலங்களை உரிய இழப்பீடு வழங்கி கையகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஏகனாபுரம் கிராம மக்கள் கூறும்போது, “எங்களின் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், விமான நிலையம் தொடர்பாக இறுதி வரைபடம் வெளியாகவில்லை. கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். விவசாயம் தவிர வேறு என்ன தொழில் செய்வதென தெரியாத நிலைக்கு ஆளாகியுள்ளோம்” என்றனர்.

SCROLL FOR NEXT