பூரண மதுவிலக்கு கோரி சட்டக் கல்லூரி மாணவிக்கு ஆதரவாகப் போராடிய பழ. நெடுமாறன் மதுரையில் கைது செய்யப்பட்டார்.
மதுரை சட்டக் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருபவர் ஆ.நந்தினி. பூரண மதுவிலக்கு கோரி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் இவர், தேர்தல் நேரத்தில் நோட்டா வுக்கு வாக்கு சேகரித்தவர். முதல்வர் வீட்டு முன் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இவர் திங்கள்கிழமை காலை தன் தந்தை ஆனந்தன் உள்ளிட்ட 5 பேருடன் திடீரென மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். தகவல் அறிந்த போலீஸார், அனுமதியின்றி போராட்டம் நடத்தக் கூடாது என அவர்களைக் கலைந்து போகக் கூறினர்.
அப்போது தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தன் ஆதரவாளர்கள் 10 பேருடன் அங்கு வந்தார். மதுவிலக்கு கோரி கோஷமிட்ட அவர்கள், திடீரென சாலையில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். போலீஸார் கேட்டுக்கொண்டும் அவர்கள் போராட்டத்தைக் கைவிடாததால், அங்கிருந்த 15 பேரையும் தல்லாகுளம் போலீஸார் கைது செய்தனர்.
போலீஸ் வேனில் ஏறுவதற்கு முன் பழ.நெடுமாறன் நிருபர்க ளிடம் கூறியதாவது: பூரண மது விலக்கு கோரி தொடர்ந்து போராடி வரும் மாணவி நந்தினிக்கு ஆதரவாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கவே வந்தேன். தொடர்ந்து மதுவுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறோம். ஆனால், அரசு எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்க மறுக்கிறது. எனவே, கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் மக்களைத் திரட்டி தொடர்ந்து போராடுவோம் என் றார். கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.