திருவள்ளூர் அருகே பள்ளி மாணவ - மாணவிகள் மீது மினி லாரி மோதிய விபத்தில் சிக்கிய 5 மாணவிகளில் 2 மாணவிகளின் கால் மற்றும் கை துண்டிக்கப்பட்டதால், மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சியடைந் துள்ளனர். இவர்களின் எதிர்காலம் கருதி அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் அருகே பாண்டூரில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி மாணவ -மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து, தங்கள் வீடுகளுக்கு செல்ல பஸ்ஸுக்காக பாண்டூர், சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தனர்.
அப்போது, ஆந்திர பகுதியில் இருந்து, திருவள்ளூர் நோக்கி மிக வேகமாக மினி லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது, சாலையின் குறுக்கே மோட்டார் சைக்கிள் ஒன்று வந்ததால், நிலை தடுமாறிய மினி லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த பள்ளிமாணவ - மாணவிகள் உள்ளிட் டோர் மீது மோதியது.
இதில், பாண்டூர் அருகே உள்ள கனகவல்லிபுரத்தைச் சேர்ந்த சவும்யா, ஷீபா, பாரதி, சுனிதா, ஷைனி ஆகிய மாணவிகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த திருப்பாச்சூரை சேர்ந்த மாணவன் பூவரசன்(16), அவருடைய நண்பர் துளசிராமன்(16) ஆகிய 7 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் 5 மாணவி கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், 7-ம் வகுப்பு மாணவியான ஷீபாவின் வலது கால் துண்டிக்கப்பட்டுள்ளது. இதே போல் 10-ம் வகுப்பு மாணவியான சவும்யாவின் வலது கையும் துண்டிக்கப்பட்டுள்ளது. சுனிதா வின் கை எலும்பும் முழுவதுமாக நொறுங்கியுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எதிர்காலம் கருதி அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே விபத்து தொடர்பாக மறியலில் ஈடுபட்ட பாண்டூர், கனகவல்லி புரம், கந்தன்கருணை கிராம மக்கள் மீது திருவள்ளூர் தாலுக்கா போலீஸார் வழக்கு பதிந்து உள்ளனர்.