மதுரையில் முதல்முறையாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் 14 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன. படம்: என்.தங்கரத்தினம் 
தமிழகம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் மதுரையில் முதல்முறையாக 14 மாடியில் குடியிருப்புகள்

சுப.ஜனநாயக செல்வம்

மதுரை: மதுரையில் முதல்முறையாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் அரசு ஊழியர்களுக்கான வாடகை வீடுகள் 14 அடுக்குமாடி குடியிருப்புகளாக கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன.

மதுரையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சொக்கிகுளம், டிஆர்ஒ காலனி, ரேஸ்கோர்ஸ் காலனி ஆகிய பகுதிகளில் வாடகை வீடுகள் உள்ளன. இங்கு அரசு ஊழியர்கள் மாத வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இதில் டிஆர்ஒ காலனி குடியிருப்பு பகுதியிலுள்ள வீடுகள் பழுதடைந்துள்ளதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

பழுதடைந்த வீடுகளை இடித்து அகற்றும் பணி நடக்கவுள்ளதால் இங்கு வசித்தவர்களுக்கு மாற்றுவீடுகள் வழங்கிட மதுரையில் முதல்முறையாக ரூ. 50 கோடியில் 224 வீடுகளுடன் கூடிய 14 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி 2020 நவம்பர் மாதம் தொடங்கியது. இன்னும் 6 மாதத்தில் பணிகளை முடிக்கும் வகையில் கட்டுமானப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதுகுறித்து வீட்டு வசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியது: "மதுரையில் வீட்டு வசதி வாரியம் சார்பில் 14 அடுக்குமாடி வீடுகள் கட்டுவது இதுவே முதல்முறை. மதுரையில் தனியார் வசம் 12 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. விமான போக்குவரத்து ஆணையம் உள்பட அரசு தரப்பு அனுமதி பெற்று கட்டப்படுகிறது. இங்கு லிப்ட் வசதி, பார்க்கிங் வசதி, சிசிடிவி கண்காணிப்பு கேமரா வசதி உள்பட அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகின்றன. இன்னும் 6 மாதத்தில் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டு வந்துவிடும்" என்றார்.

SCROLL FOR NEXT