சேலம்: "ஒருபக்கம் மின்கட்டண உயர்வு, இன்னொரு பக்கம் சொத்துவரி உயர்வு, விரைவாக பேருந்து கட்டணமும் உயரப்போகிறது" என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "பத்தாண்டு காலம் அதிமுக தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் நான் முதல்வராக இருந்தேன். பல்வேறு பிரச்சினைகள் இருந்தன. இருந்தாலும், மக்கள் துன்புறும்போது, மக்கள் பாதிக்கப்படாதவாறு, அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். கடுமையான கரோனா வைரஸ் தொற்று, வேலைவாய்ப்பு கிடையாது, வருமானம் கிடையாது. இந்த சூழலில், மின்கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை பெரும் சுமையாக மக்கள் கருதுகின்றனர். அதைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.
இதே போல், சொத்துவரியையும் அரசு உயர்த்தியிருக்கிறது. குடியிருப்புகளுக்கு நூறு சதவீதம், கடைகளுக்கு 150 சதவீதம் உயர்த்தியுள்ளது. மக்கள் எப்படி தாக்குப் பிடிப்பார்கள். ஒருபக்கம் மின்கட்டண உயர்வு, இன்னொரு பக்கம் சொத்து வரி உயர்வு, விரைவாக பேருந்து கட்டணமும் உயரப்போகிறது.
மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு என்று சாக்கு போக்கு சொல்லி மக்களை திசைத்திருப்ப பார்க்கின்றனர். அனைவருக்குமே தெரியும், கரோனா காலத்தில் இரண்டு ஆண்டு காலமாக வருமானமே இல்லை. அனைவருமே பாதிக்கப்பட்டோம். எனவே பாதிப்புகளில் இருந்து மக்கள் மீளுகின்ற வரை இந்த கட்டணங்களையெல்லாம் உயர்த்தக் கூடாது. இதுதான் முறை, இதுதான் ஒரு அரசின் கடமை. மக்களின் பொருளாதார நிலையை உணர்ந்து இந்த அரசு செயல்பட வேண்டும். ஆனால், இந்த அரசு அவ்வாறு செயல்படுவதாக தெரியவில்லை.
இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, ஒரு நிர்வாகத் திறமையற்ற அரசாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். திறமையுள்ள அரசாக இருந்தால், பள்ளி மாணவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் செயல்களில் ஈடுபடமாட்டார்கள். அதிமுக ஆட்சியில் சரியான முறையில் செயல்பட்டு மாணவர்களின் விலை மதிக்கமுடியாத உயிர்களை நாங்கள் பாதுகாத்து வந்தோம். அதேபோல், செயலற்ற திறமையற்ற ஒரு முதல்வர் தமிழகத்தை ஆட்சி செய்வதால், போதைப்பொருட்கள் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது" என்று அவர் கூறினார்.