திருப்பூரில் நடந்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசும் வைகோ. | படம்: இரா.கார்த்திகேயன்.   
தமிழகம்

“தமிழகத்தில் பாஜக வளர முடியாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்” - இந்திய கம்யூ. மாநாட்டில் வைகோ பேச்சு

இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: “போராளி என்று சொல்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை” என்று திருப்பூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் வைகோ தெரிவித்தார். மேலும், “பாஜக எங்கு வளர்ந்தாலும் தமிழகத்தில் அவர்கள் வளர முடியாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.

திருப்பூரில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் 3-ம் நாள் நிகழ்வு இன்று நடந்தது. இதில், பங்கேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்தி பேசியது: “பொதுவுடமை கொள்கைக்காக தன்னை அர்ப்பணித்துள்ள தலைவர்கள் நிறைந்துள்ள அவை இது. தொடக்க காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் அனுபவித்தது கொஞ்சம் அல்ல. தூக்குமேடைகளையும், எண்ணிடலங்கா சித்ரவதைகளையும் அனுபவித்தவர்கள்.

பல்வேறு போராட்டங்களில் துப்பாக்கி குண்டுகளுக்கும், தூக்கு கயிறுகளுக்கும் அஞ்சாமல் இருந்தவர்கள். 'தகைசால் தமிழர்' நல்லகண்ணு வீரம் நிறைந்தவர். எதற்கும் அஞ்சாதவர். அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் பண்புள்ளவர். உயிர்பலிக்கு அஞ்சாமல் நல்லக்கண்ணு போராடி கட்சியை வளர்த்தார். கோவை, திருப்பூர் என கம்யூனிஸ்ட் இயக்கத்தினரின் உயிர்த் தியாகத்தால் கட்சி மிக வேகமாக வளர்ந்த இடம் இது.

இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு கான்பூருக்கு பிறகு, சுகாதாரப் பணியாளர்கள், பஞ்சப்படி போராட்டங்களுக்கு வெற்றி கிட்டிய இடம் திருப்பூர். இந்தியாவில் வேறெங்கும் நிகழவில்லை. நாட்டின் சுதந்திரத்துக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு இன்றைக்கு நம்மை ஆண்டுகொண்டிருக்கும் பாஜக இந்துத்துவா கொள்கையை புகுத்துகிறது. ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே மதம் என்பதை திணிக்கிறது.

ஒரே நாடாக அமைந்தால், சோவியத் யூனியனை போல் பிரிந்து போகும். அனைத்து மொழி, மதத்துக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். மதவெறியோடு, சனாதன வெறியோடு, இந்தியை, சமஸ்கிருதத்தை திணிக்கும் போக்கு நடக்கிறது. ஆயுதப் போராட்டத்தை நாம் கையில் எடுக்க தேவையில்லை. மோடி அரசு அம்பானி, அதானி கூட்டத்துக்காக ஆட்சி நடத்துகின்றனர். மக்களுக்காக ஆட்சி நடத்தவில்லை.

ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, திருப்பூரில் நாம் எடுத்துக்கொள்ளும் உறுதி, பொருத்தமாக இருக்கும். சனாதன சக்திகளை, இந்துத்வா சக்திகளை முறியடிக்க வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது. பாஜக எங்கு வளர்ந்தாலும் தமிழகத்தில் அவர்கள் வளர முடியாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். தோழமைக் கட்சிகள் ஒன்றாக இணைந்து எந்த அடக்குமுறைக்கு அஞ்சாமல் இந்த ஒற்றுமையை பலப்படுத்தினால், தமிழகத்தில் பாஜக தலை எடுக்க முடியாது.

நமக்கு கடமை இப்போதுதான் ஆரம்பிக்கிறது. பாஜகவினர் ஆலயங்கள் பற்றி அவர்கள் பேசுகின்றனர். நாம் ஆலயங்களுக்கு விரோதிகள் அல்ல. அவரவர் மதத்துக்கான மரியாதையோடு நடத்தப்பட வேண்டும். அதேபோல் பகுத்தறிவு கருத்துகளை பேசுபவர்கள், அந்தப் பகுத்தறிவு கருத்துக்களை கூற வேண்டும். உங்கள் முன்பு பேசும்போது, சோர்வு அகன்று, களைப்பு நீங்கிவிடுகிறது. போராளி என்று சொல்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை'' என்று அவர் பேசினார்.

தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, அகில இந்திய பொதுச் செயலாளர் து.ராஜா, மற்றும் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் அவரை சந்தித்து, உடல்நலன் விசாரித்து நினைவுப்பரிசு வழங்கினர். முன்னதாக மதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தை திருப்பூர் காந்திநகர் பகுதியில் வைகோ திறந்துவைத்தார்.

SCROLL FOR NEXT