தமிழகம்

தமிழகத்தில் சைபர் மோசடிக்கு உதவிய 837 பேர் கைது: 48 மணி நேரம் சிறப்பு அதிரடி நடவடிக்கை

204 செல்போன்கள், 185 சிம் கார்டுகள் பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் மேற்கொண்ட 48 மணி நேர சிறப்பு அதிரடி நடவடிக்கையில், சைபர் மோசடியில் தொடர்புடைய 837 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 204 செல்போன்கள், 185 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சிபிஐ அதிகாரிகள், மும்பை கமிஷனர், வருமான வரித் துறை கமிஷனர் என பல உயரதிகாரிகளின் பெயர்களைக் கூறி பல கும்பல்கள் பொதுமக்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்து வருகிறது.

வாட்ஸ் அப் வீடியோகால் மூலம் அழைக்கும் சைபர் மோசடி கும்பல், ‘உங்கள் ஆதார், பான் எண்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. இதுதொடர்பாக உங்களை கைது செய்ய போகிறோம்’ என்று உயரதிகாரி போல் நடித்து மிரட்டும்.

அதற்கேற்ப சீருடைகளையும் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அணிந்து மிரட்டி பணம் பறிக்கின்றனர். நாங்கள் சொல்லும் வரை வெளியில் செல்ல கூடாது, யாரிடமும் பேச கூடாது. உங்களை ‘டிஜிட்டல் கைது’ செய்துள்ளோம் என்று பல நாட்கள் மிரட்டிய சம்பவங்களும் நடந்துள்ளன.

தவிர ஆன்லைன் வர்த்தகம் மற்றும் முதலீட்டு திட்டங்களில் அதிக லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி பணம் சுருட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்த மோசடிகளில் ஈடுபடும் கும்பல்கள், தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை இடைத்தரகர்கள் மற்றும் முகவர்களாகப் பயன்படுத்தி வருகின்றன. அவர்களுக்கு மோசடி தொகையில் 10 சதவீதம் வரை கமிஷன் வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் சிலரும், தங்களது வங்கி கணக்குகளை மோசடி கும்பல்கள் பயன்படுத்த அனுமதித்து வருவது விசாரணையில் தெரிய வந்தது.

டிஜிபி உத்தரவு: சைபர் மோசடிக்குத் துணைபோகும் முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களைக் கண்டறிந்து கைது செய்ய அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாநில சைபர் குற்றப்பிரிவு போலீஸார் ஒருங்கிணைப்பில் மாவட்ட போலீஸாருடன் இணைந்து கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் 48 மணி நேர சிறப்பு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாநில சைபர் குற்றப்பிரிவு டிஜிபி பாலநாகதேவி தலைமையில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில், தமிழகம் முழுவதும் 837 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையில் தேசிய சைபர் குற்றப் புகார் இணையதளமான (என்சிஆர்பி) 9,804 புகார்களுடன் சம்பந்தப்பட்ட ரூ.545 கோடியே 27 லட்சத்து 27,809 மதிப்பிலான மோசடி பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. சைபர் குற்ற வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட 601 முதல் தகவல் அறிக்கைகளில் தொடர்புடைய 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசடி பணத்தை பெறவும், பல்வேறு கணக்குகளுக்கு மாற்றவும் பயன்படுத்தப்படும் ‘மியூல்’ வங்கி கணக்குகளைத் தடுக்க 157 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 204 செல்போன்கள், 185 சிம் கார்டுகள், 4 லேப்டாப் மற்றும் டெஸ்க் டாப் கணினிகள், ஒரு பென் டிரைவ் உள்ளிட்ட சேமிப்பு சாதனம், ரூ.1 லட்சத்து 2,000 ரொக்கம், 114 வங்கி பாஸ் புக்குகள், 29 காசோலை புத்தகங்கள், 73 ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டுகள், ஒரு கிரெடிட் கார்டு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணைக்காக 155 செல்போன் எண்கள் மற்றும் 58 வங்கி கணக்குவிவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் டிஜிட்டல் ஆதாரங்களைப் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம் சைபர் குற்ற கும்பலின் அடுத்தடுத்த அடுக்குகளில் செயல்படும் நபர்கள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ள கூட்டாளிகளைக் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த 48 மணி நேர சிறப்பு நடவடிக்கை, சைபர் குற்ற வலையமைப்பைச் சீர்குலைக்கும் முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், சட்டத்தில் ‘டிஜிட்டல் கைது’ என்பது இல்லை. அப்படி யாராவது உங்களை மிரட்டினால் பயப்பட வேண்டாம். உடனடியாக போலீஸில் தகவல் தெரிவிக்கவும் என்று போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT