ஈரோடு புத்தகத் திருவிழாவில் சிறுவர்களுக்கான 25 நூல்கள் வெளியிடப்பட்டன. நூல்களை சிறார்கள் வெளியிட சிறார்களே பெற்றுக் கொண்டனர்.
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கு பல்வேறுபதிப்பகங்கள் சார்பில், 230 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதால் காலை 11 மணி முதல் வாசகர்கள்கூட்டம், கூட்டமாக புத்தக அரங்கில் தங்களுக்கு தேவையான புத்தகங்களை தேர்வு செய்ய குவிந்தனர்.
இங்கு புதிய நூல்களை வெளியிட தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் நேற்று காலை சிறுவர்களுக்கான 25 நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது. இந்த நூல்களை சிறுவர்கள் வெளியிட சிறுவர்களே பெற்றுக் கொண்டனர். இது சிறுவர்களிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இவ்விழாவில், எழுத்தாளர்கள் தேவி நாச்சியப்பன், சரிதா ஜோ, சுகுமாரன், உமாமகேஸ்வரி, நீதிமணி, சர்மிளாதேவி, வே.சங்கர் ஆகியோர் பங்கேற்றனர். பாரதி புத்தகாலய நிர்வாகி இளங்கோ நன்றி கூறினார்.
சாலமன் பாப்பையா பேச்சு
புத்தகத் திருவிழாவில், தினசரி மாலை நேரத்தில் சிந்தனை அரங்க நிகழ்வு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த சிந்தனை அரங்கு நிகழ்வில், பேராசிரியர் சாலமன் பாப்பையா நடுவராகப் பங்கேற்ற பட்டிமன்றம் நடந்தது.
இதில், சாலமன் பாப்பையா பேசும்போது, “அறிவை செதுக்கிக்கொள்ளவும், உலகம், மானுடம், வரலாறு குறித்து அறிந்து கொள்ளவும் புத்தகங்களை படிக்க வேண்டும். இளைஞர்களிடம் வாசிக்கும் பழக்கம் மேம்பட வேண்டும். எழுத்தாளனின்படைப்புகள் படிப்பவனை கட்டிப்போடும் வல்லமை மிக்கவையாக உள்ளன. அத்தகைய வல்லமை மிக்க படைப்புகள் தான் சிறந்த இலக்கியமாக போற்றப்படுகின்றன.
சமுதாயத்துக்கு புத்துணர்ச்சிஏற்படுத்தவே புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. புத்தகத் திருவிழாக்களை தேசத் திருவிழாக்களாக நடத்த வேண்டும்” என்றார்.