மகசூல் அதிகரிப்பு மற்றும் சந்தையில் விலை குறைந்ததால், போச்சம்பள்ளி அருகே அறுவடை செய்த தக்காளியை பண்ணந்தூர் ஏரியில் மீன்களுக்கு உணவாக விவசாயிகள் கொட்டினர். 
தமிழகம்

கிருஷ்ணகிரி | சந்தையில் விலை வீழ்ச்சி - மீன்களுக்கு உணவாக ஏரியில் தக்காளியை கொட்டிய விவசாயிகள்

செய்திப்பிரிவு

மகசூல் அதிகரிப்பால், விலை குறைந்துள்ள நிலை யில் போச்சம்பள்ளி பகுதி விவசாயிகள் மீன்களுக்கு உணவாக தக்காளியை ஏரியில் கொட்டி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகாவில் மருதேரி, பண்ணந்தூர், பனங்காட்டூர், அரசம்பட்டி, சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி விலை ரூ.100-க்கும் அதிகமாக விற்பனையானது.

இதையடுத்து, இப் பகுதியில் விவசாயிகள் பலர் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டனர். தற்போது, தக்காளி மகசூல் அதிகரித்துள்ளது.

இதனால், சந்தையில் விலை விழ்ச்சியடைந்துள்ளது. மேலும், விற்பனையும் சரிந்துள்ளது இதனால், விவசாயிகள் அறுவடை செய்த தக்காளியை அப்பகுதியில் உள்ள ஏரியில் கொட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, “தக்காளி விலை குறைந்துள்ளதால், அறுவடை கூலி கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எங்களிடம் தக்காளி அளவு, தரத்தை பொறுத்து கிலோ ரூ.2-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

உழவர் மற்றும் காய்கறி சந்தைகளில் கிலோ ரூ.8 முதல் ரூ.7 வரை விற்பனையாகிறது. இதனால், எங்களுக்கு வருவாய் இழப்பும், மழையால் தோட்டத்தை பராமரிக்க வேண்டிய நிலை உள்ளதால் தக்காளியை பறித்து ஏரியில் மீன்களுக்கு உணவாக வீசி வருகிறோம்” என்றனர்.

SCROLL FOR NEXT