தமிழகம்

பேருந்தில் 56 பவுன், ரூ.1.35 லட்சம் திருட்டு: ஆந்திர பெண் சென்னையில் கைது

செய்திப்பிரிவு

பேருந்தில் பயணிகளிடம் திருடும் ஆந்திர பெண்ணை வடபழனி போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 56 பவுன் நகைகள், ரூ.1.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.

நேற்று முன்தினம் பிற்பகலில் ஐயப்பந்தாங்கலில் இருந்து வள்ளலார் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த மாநகர பேருந்து (தடம் எண் 37) வடபழனி பேருந்து நிலையத்துக்குள் வந்தது. அதில் பயணித்துக் கொண்டிருந்த சாந்தி (45) என்ற பெண் வங்கியில் செலுத்துவதற்காக ரூ.25 ஆயிரத்தை கைப்பையில் வைத்திருந்தார். ஒரு பெண் அந்தர பையைத் திருடிக்கொண்டு வடபழனி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஓடினார். சாந்தி சத்தம் போட்டுக்கொண்டே அந்த பெண்ணின் பின்னால் ஓடினார்.

அப்போது அங்கு கண்காணிப்பு பணியிலிருந்த போலீஸார், அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்து, பணப் பையை பறிமுதல் செய்து சாந்தியிடம் ஒப்படைத்தனர். பின்னர் பணத்தை திருடிய பெண்ணை வடபழனி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் பணப் பையை திருடிய பெண்ணின் பெயர் கிருஷ்ணம் மாள்(30) என்பதும், இவர் ஆந்திர மாநிலம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இவர் பேருந்தில் பயணிகளிடம் திருடுவதை தொழிலாக கொண்டவர். இதற்காக சென்னை மாதவரம் அருகே கோவிந்தபுரம் என்ற இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இவர் சென்னையில் பள்ளிக்கரணை, மாம்பலம், கோடம்பாக்கம், கே.கே.நகர், அசோக்நகர் மற்றும் பல்வேறு இடங்களில் மாநகர பேருந்தில் பயணித்து, பயணிகளிடமிருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியுள்ளார். இவர் மீது சென்னையில் 18 திருட்டு வழக்குகள் உள்ளன. கிருஷ்ணம்மாளை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 56 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.35 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

நண்பரிடம் 12 பவுன் திருட்டு

குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம் அய்யன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பகவதி(27). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன்(26), பகவதி வீட்டுக்கு வந்தார். வீட்டில் யாரும் இல்லாததால் இரவு அங்கேயே தங்கி இருவரும் மது அருந்தியதாக தெரிகிறது.

மறுநாள் காலையில் 12 பவுன் நகையை காணவில்லை. புகாரின் பேரில் குன்றத்தூர் போலீஸார், பாலமுருகனிடம் விசாரணை மேற் கொண்டனர். வேலை இல்லாமல் இருந்ததால் செலவுக்காக நண்பரின் நகையை திருடியதாக அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து 12 பவுன் நகைகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT