தமிழகம்

அஞ்சலகங்களில் ரூ.25-க்கு தேசியக் கொடி விற்பனை

செய்திப்பிரிவு

சுதந்திர தினத்தையொட்டி அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை வீடுகளில் ஏற்றுவதற்காக பலர் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

நாட்டின் 75-வது சுதந்திரதின விழா, நாடு முழுதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவை, திருவிழாவாக ஒவ்வொரு வீடுகளிலும் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து 'இல்லந்தோறும் மூவர்ணம்' எனும் பிரச்சாரத்தை, மத்திய அரசு தொடங்கியது.

இதன் ஒருபகுதியாக, வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்களில் தேசிய கொடியேற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களிலும் தேசியக் கொடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் விற்பனையை தொடங்கி வைத்தார். ஒரு தேசியக் கொடியின் விலை ரூ.25 ஆகும். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

தேசிய கொடியை மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்க பொதுமக்கள், நலச்சங்கத்தினர், தன்னார்வலர்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், www.epostoffice.gov.in என்ற வலை தளத்திலும் ஆர்டர் செய்து, ஆன்லைன் வாயிலாகவும் வாங்கலாம்.

SCROLL FOR NEXT