வீட்டின், வாகனத்தின் சாவி தொலைந்துவிட்டால் ஒருவர் அடையும் பதற்றத்துக்கு அளவில்லை. அந்த நேரத்தில் ஆபத்பாந்தவனாய் திகழ்பவர், மாற்றுச் சாவி தயாரித்துக் கொடுக்கும் தொழிலாளி. ஆனால், “இந்தத் தொழிலில் நேர்மையே மூலதனம். இல்லாவிட்டால் குற்றவாளியாகிவிடுவேன்” என்று பெருமிதத்துடன் கூறுகிறார், கடந்த 32 ஆண்டுகளாக மாற்றுச் சாவி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள அப்துல் அஜீஸ்(42).
கோவை டவுன்ஹால் பகுதியில் மாற்றுச் சாவி தயாரிக்கும் கடை நடத்தி வரும் இவரது தந்தை வாப்பு, கோவை பழைய மார்க்கெட் பகுதியில் இதே தொழிலில் ஈடுபட்டிருந்தார். தந்தையின் தொழிலைத் தொடரும் அப்துல் அஜீஸ் கூறியதாவது:
எனது 10 வயதிலேயே தந்தையுடன் இத்தொழிலுக்கு வந்துவிட்டேன். எனது சகோதரர்கள் அப்துல் ரஷீத், சௌகத் அலி ஆகியோரும் இத்தொழிலில்தான் ஈடுபட்டுள்ளனர். பீரோ, வீடு, கடைகளின் பூட்டுகள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றுக்கு மாற்றுச் சாவி தயாரித்துக் கொடுப்பதில் 32 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.
பொதுவாக, வீட்டின் சாவி தொலைந்து, அந்தப் பூட்டை உடைக்க வேண்டியிருந்தால், வீட்டின் சொந்தக்காரர் மிகுந்த வேதனையடைவார். மாற்றுச் சாவி செய்து தரும்போது, அவர்களது வேதனை குறைந்துவிடும். இதேபோல, வாகனங்களின் சாவியைத் தொலைத்துவிட்டால், மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாக வேண்டியிருக்கும். அவர்களுக்கு நான் சிறு உதவி செய்வதாகக் கருதுகிறேன். வாகனங்களைப் பொறுத்தவரை, என்னை நாடி வரும் வாகன உரிமையாளரிடம், உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே, மாற்றுச் சாவி செய்து கொடுப்பேன். சிறிது சந்தேகம் ஏற்பட்டாலும், அருகில் உள்ள போலீஸாரிடம் தகவல் தெரிவித்துவிடுவேன்.
இதேபோல, வீட்டின் பூட்டைக் கொண்டுவருபவர்களிடமும், ரேஷன் கார்டு நகல் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்ற பின்னரே, மாற்றுச் சாவி செய்து தருகிறேன். இந்தத் தொழிலில் நேர்மை இல்லாவிட்டால், குற்றவாளியாகிவிடுவதற்கான சாத்தியங்கள் அதிகம்.
கடந்த 32 ஆண்டுகளில் சுமார் 20 ஆயிரம் சாவிகளைச் செய்துகொடுத்துள்ளேன். சில நேரங்களில் போலீஸ்காரர்களும் என்னை அழைத்துச் சென்று, வழக்கு தொடர்புடைய வீட்டின் பூட்டை திறக்குமாறு கூறியுள்ளனர். நேர்மையுடன் இருந்ததால், இத்தனை ஆண்டுகளில் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை.
இந்தத் தொழிலில், தினமும் ரூ.200, ரூ.300 வருவாய் கிடைக்கிறது. சில நாட்களில் சற்று கூடுதலாகவும், சில நாட்களில் குறைவாகவும் கிடைக்கும். இந்த வருவாயைக் கொண்டு குடும்பத்தை நடத்துவதில் சிரமம் இருந்தாலும், எளிய வாழ்க்கை முறை வருவாய்ப் பிரச்சினையைப் போக்கிவிடுகிறது. இதனால், மனநிறைவுடன் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளேன்.
தற்போது, கம்ப்யூட்டர் மூலம், நவீன முறையில் மாற்றுச் சாவி தயாரிக்கும் முறைகள் வந்துவிட்டாலும், நான் கையால் சாவிகளைத் தயாரிக்கிறேன். தற்போது சிறிய இடத்தில் கடை நடத்தி வருகிறேன். மழை நேரத்தில் மிகவும் சிரமம் ஏற்படும் இவ்வாறு அவர் கூறினார்.
அலிகாரும், திண்டுக்கல்லும்
இந்திய அளவில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகார், பூட்டு தயாரிக்கும் தொழிலுக்கு பெயர் பெற்றது. தமிழகத்தில் பூட்டு என்றாலே நினைவுக்கு வருவது திண்டுக்கல். நவீன இயந்திரங்களின் உதவியுடன், பெரு நிறுவனங்கள் பூட்டு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டாலும், குடிசைத் தொழிலாகவும் பூட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. பூட்டில் உள்ள நெம்புகோல்களைக் கொண்டு, அதன் தரம் வகைப்படுத்தப்படுகிறது. பொதுவாக 6 முதல் 8 நெம்புகோல்களுடன் பூட்டு தயாரிக்கப்படுகிறது. தற்போது, மிக நவீனத்துவம் வாய்ந்த, பல்வேறு வகையிலான பூட்டுகளும், சாவியும் தயாரிக்கப்படுகின்றன.