சென்னை: மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும் மீனவர்கள் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை மீட்க தூதரக அளவிலான நடவடிக்கைகளை விரைவுபடுத்திடக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களின் விசா காலாவதியானதாலும், ஓமன் நாட்டவரால் அவர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படாததாலும் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.
எனவே, அவர்களை மஸ்கட்டிலிருந்து திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்தி, தூதரக அளவில் தேவையான அனைத்து உதவிகளை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.