புதுச்சேரி: இந்திய தொல்லியல் துறையுடன் இணைந்து பண்டைய வாணிப நகரங்களை அடையாளம் காண பி. எஸ். பாளையம் கோட்டைமேட்டில் அகழாய்வு தொடங்குகிறது. வரும் செப்டம்பர் 30க்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கான முழு நிதியை கல்வித்துறை அளிக்கிறது.
புதுச்சேரியில் அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மட்கலன்களும், வெளி நாடுகளில் இருந்து தயாரிக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்ட மட்கலன்களும் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் காலம் கி.மு.200லிருந்து கி.பி.200 வரை ஆகும். பல வகை சுடுமண் விளக்குகளும் ஓடுகளும் அகழாய்வில் கிடைத்தன. இதன் மூலம் பண்டைய காலத்தில் அரிக்கமேடு புகழ்பெற்ற வணிகத்தலமாக விளங்கியது என தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இதே போல் புதுச்சேரி முழுவதும் பல்வேறு இடங்களில் மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரிக்கமேட்டில் செய்யப்பட்ட அகழாய்வில் கிடைத்த மணிகள், மண்பாண்ட ஓடுகள், கிரேக்க, ரோமானியர்கள் அரிக்கமேட்டில் தங்கி நீண்ட காலத்திற்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்தனர் என்பது உலகிற்கு தெரியவந்துள்ளது. இவ்வளவு சிறந்த துறைமுகமாக விளங்கிய அரிக்கமேட்டிற்கு புதுச்சேரியின் எந்த பகுதிகளில் இருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்டது என்பதும் இன்றைக்கும் புதிராகவே உள்ளது. இந்த புதிருக்கு விடைதேடும் வகையில், அரிக்கமேடு காலத்தோடு தொடர்புடைய உள்ளூர் வணிகதலங்களை கண்டறிந்து அகழாய்வு மேற்கொள்ள புதுச்சேரி அரசு திட்டமிட்டது.
தாகூர் அரசு கலைக்கல்லுாரி வரலாற்று துறை பேராசிரியர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது புதுச்சேரி திருக்கனுார் அடுத்த பி.எஸ்.,பாளையம் கோட்டைமேடு பகுதியில் உள்ள பம்பையாற்றின் ஓரத்தில் கி.பி.1ம் நூற்றாண்டின் பயன்படுத்திய ரவுலட்டடு மண்பாண்டங்கள், உறைகிணறு, பழங்கால செங்கற்கள், பழங்கால பொருட்களின் சிதறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
எனவே கோட்டைமேடு பகுதிக்கும், அரிக்கமேட்டிற்கும் தொடர்பு இருக்கலாம் என கருதினர். இந்த பகுதியில் அகழாய்வு மேற்கொண்டால் பண்டைய காலத்தில் புதுச்சேரிக்கு எந்தெந்த நாடுகளில் இருந்து வியாபாரம் செய்ய வந்தனர். இங்கிருந்து எங்கெல்லாம் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது தெளிவாக தெரிய வரும். எனவே கோட்டைமேட்டில் உள்ள பம்பை ஆறு பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. அவர்களும் அனுமதி வழங்கியுள்ளனர்.
தற்போது அகழாய்வு பணிக்கான இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ரவிசந்திரன் கூறுகையில், "இந்திய தொல்லியல் துறையுடன் இணைந்து புதுச்சேரி அரசு மற்றும் தாகூர் அரசு கல்லூரி வரலாற்று துறை குழுவானது அகழாய்வை வரும் 6ம் தேதி தொடங்குகிறோம். அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சந்திரபிரியங்கா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். மொத்தமாக 4 இடங்களில் அகழாய்வு நடத்துவோம். இப்பணி வரும் செப்டம்பர் 30க்குள் நிறைவு செய்யவுள்ளோம். அக்காலம் வரை தொல்லியல் துறை அனுமதி தந்துள்ளது.
அகழாய்வுப் பணிக்கான முழு நிதியை கல்வித்துறை ஏற்கிறது. உள்நாட்டிலிருந்து அரிக்கமேட்டுக்கு உள்நாட்டு பொருட்கள் கொண்டு வந்ததை அறிய முடியும். புதுச்சேரியின் பழங்கால நகரங்களின் பெருமையும், புதையுண்டு கிடக்கும் அக்கால மக்களின் சிறப்பும், பண்டைய காலத்தில் பயன்படுத்திய கட்டடக்கலையும் அகழாய்வினால் அறிய முடியும்" என்று குறிப்பிட்டார்.
பி.எஸ்.,பாளையம் கோட்டைமேடு பம்பையாற்றங்கரையில் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக எந்தவித செயற்கை மாற்றமும் இன்றி மணல்மேடுகளாக உள்ள பகுதிகளில் நடக்கும் அகழாய்வு புதுச்சேரிக்கு பெருமை சேர்க்கும்.