பாரம்பரிய இந்திய மருத்துவம் தொடர்பான 4 நாள் மாநாடு, ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்தது. இதில் பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் சுவாமி பாபா ராம்தேவ், நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் பங்கேற்றனர். 
தமிழகம்

பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவ மாநாடு; ஆரோக்கியம், செழிப்புடன் இருக்க இயற்கையான வாழ்வே சிறந்த வழி: பாபா ராம்தேவ் கருத்து

செய்திப்பிரிவு

ஹரித்வார்: ‘பாரம்பரிய இந்திய மருத்துவத்தின் நவீனமயமாக்கல்: பொது சுகாதாரம், தொழில் துறையின் பார்வையில்’ என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது.

இதில், 2-ம் நாள் நிகழ்ச்சியில் பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் சுவாமி பாபா ராம்தேவ், நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விஞ்ஞானிகள், வல்லுநர்கள் மத்தியில் ராம்தேவ் பேசும்போது, “இயற்கைதான் நமது கலாச்சாரத்தின் முகம். நாம் ஆரோக்கியத்துடனும், செழுமையுடனும் இருக்க, இயற்கையோடு இணைந்த வாழ்க்கையே சிறந்த வழி. ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஏற்படுத்திய விழிப்புணர்வால், லட்சக்கணக்கான மக்கள் இன்று தங்கள் வீட்டு தோட்டத்தில் துளசி, கற்றாழை போன்ற மூலிகைகளை வளர்த்து வருகின்றனர்” என்றார்.

ஆச்சார்யா பாலகிருஷ்ணன் பேசும்போது, ஆயுர்வேத துறையில் பதஞ்சலி நிறுவனத்தின் சிறந்த பங்களிப்பையும், உலகம் முழுவதிலும் ஆயுர்வேத மருத்துவத்துக்கு எந்த அளவுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது என்பதையும் விளக்கினார்.

தொடர்ந்து, பல்வேறு வல்லுநர்கள் ஆயுர்வேத சிகிச்சையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தனர்.

அமெரிக்காவை சேர்ந்த டாக்டர்யு.என்.தாஸ், 2-வது நாள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மருந்து கண்டுபிடிப்பு மற்றும் மருந்துகளின் பரிசோதனை செயல்முறை பற்றி விரிவாக விளக்கினார். ஊட்டச்சத்து உணவும், உடற்பயிற்சியும் நமது வழக்கமான வாழ்க்கை முறையின் அங்கமாக மாற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், 21 நாடுகளை சேர்ந்த 50 நிறுவனங்கள் நேரடியாகவும், இணைய வழியிலும் பங்கேற்றுள்ளதாக மாநாட்டுஏற்பாட்டுக் குழு தலைவர் டாக்டர் வேதபிரிய ஆர்யா தெரிவித்தார்.

பதஞ்சலி ஆயுர்வேத கல்லூரியின் உதவி பேராசிரியர் ராஜேஷ்மிஸ்ரா, பனாரஸ் இந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் எச்.பி.சிங், டிஆர்டிஓ விஞ்ஞானி ரஞ்சித் சிங்,குவாஹாட்டி ஐஐடி பேராசிரியர்ராக்கி சதுர்வேதி, தமிழ்நாடுவேளாண்மை பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் கே.ராஜாமணி ஆகியோர் உரையாற்றினர்.

உரை நிகழ்ச்சி, போஸ்டர் வடிவமைப்பு போட்டிகளில் முதல்3 இடங்களை பிடித்த ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் கவுரவிக்கப்பட்டனர். குழு நடனம், பாடல் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளும் நடந்தன.

SCROLL FOR NEXT