ரயில் டிக்கெட் முன்பதிவு உட்பட 5 வகையான வசதிகள் செல்போன் மூலம் பெற புதிய செயலியை அடுத்த 3 மாதங்களில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) அறிமுகப்படுத்தவுள்ளது.
இது தொடர்பாக ஐஆர்சிடிசி உயர் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
ஐஆர்சிடிசி-யில் மொத்தம் 4 கோடி பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். சராசரியாக தினமும் 5 லட்சம் முதல் 5.7 லட்சம் பேர் வரையில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் கவுன்ட்டர்களில் டிக்கெட் எடுத்து பயணம் செய்து வருகின்றனர். ரயில் பயணிகளுக்கு செல்போன் தொழில்நுட்பம் மூலம் பல்வேறு வசதிகள் எளிமையாக கிடைக்கும் வகையில் திட்டங்களை ரயில்வே துறை செயல்படுத்தி வருகிறது. இதனால், பயணிகள் எளிமையாக சேவை பெறுவதுடன், வீண் அலைச்சலையும் தவிர்க்க முடியும். தற்போது ரயில் டிக்கெட் முன் பதிவு, உணவு ஆர்டர் செய்வது, கால்டாக்சி, ரயில் நிலையங்களில் ஓய்வு அறைகள் முன்பதிவு, ஹோட்டல் அறை முன்பதிவு, போர்ட்டர் சேவை கோருவது, காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருக்கும்போது விமான பயணம் சேவை பெறுவது, ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகளில் சுகாதாரம் தொடர்பாக புகார் தெரிவிப்பது உள்ளிட்ட ஒருங்கிணைந்த வசதிகளைக் கொண்ட புதிய செல்போன் செயலியை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த 3 மாதங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும்.
இந்த புதிய செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். முதல்கட்டமாக 5 சேவைகள் இதில் கிடைக்கும். பின்னர், படிப்படியாக மற்ற சேவைகளும் நடைமுறைப்படுத்தப்படும். இந்த புதிய திட்டம் மூலம் ரயில்வே துறைக்கு வருமானமும் கிடைக்கும், பொதுமக்களும் பயனடைய முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.